அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்கக்கோரி மதுரையில் கரும்புடன் விவசாயிகள் மறியல்

மதுரை, நவ. 27: அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்கக் கோரி, கரும்பு விவசாயிகள் நேற்று கரும்புகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்ட அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவையை துவக்க வேண்டும். 2 ஆண்டுக்கான கரும்புக்கு பாக்கி ரூ.19 கோடியே 90 லட்சத்தையும், லாபத்தின் பங்கு ஒரு கோடி ரூபாயையும் சேர்த்து மொத்தம் ரூ.20 கோடியே 90 லட்சத்தை கரும்பு விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட, அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகே திரண்டனர்.இப்போராட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் கதிரேசன், மாநிலக்குழு உறுப்பினர் கருப்பையா உள்ளிட்ட கரும்பு விவசாயிகள் கரும்புகளுடன் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், ஏற்பட்டது. உடனே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை போலீசார் தடுத்தனர், அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையும் மீறி, விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பழனிச்சாமி உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து பழனிச்சாமி கூறுகையில், ‘‘மதுரை தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தென் மாவட்டத்தில் உள்ள ஒரே அரசு சர்க்கரை ஆலையாகும். கடந்த 2019-20ம் ஆண்டு அரவை பருவத்திற்கு 1,500 ஏக்கர் கரும்பு பயிரிடப்பட்டிருந்தது. ஆலைக்கு நஷ்டம் வரும் என கருதிய ஆலை நிர்வாகம், தனியார் ஆலைக்கு கரும்புகளை மாற்றி அனுப்பியது. இதற்கான பணம் இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. வெட்டுக்கூலிக்கு கூட கடன் வாங்கி கொடுத்துள்ளோம். இதனால், 2மற்றும் 3ம் போக கரும்பை விவசாயிகள் அழித்துவிட்டனர். வரும் ஆண்டில் ஆலையை ஒடாது என நினைத்து பயிரிடமறுக்கின்றனர். இந்த ஆலையை நம்பி பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளனர். இந்தாண்டுக்கு 30 ஆயிரம் டன் கரும்பு அரவைக்கு உள்ளது. தனியார் ஆலைகளும் ஓடாத நிலையில், வெளிமாவட்டத்தில் இருந்து, அரவைக்கு கரும்புகள் வர வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஆண்டு அரசு சர்க்கரை ஆலையை இயக்க ேவண்டும்’’ என்றார்.

Related Stories: