×

திண்டுக்கல் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் நவ.30 கடைசி நாள்

திண்டுக்கல், நவ. 27: திண்டுக்கல் மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டு தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு அதிகபட்சமாக 2 முதல் 3 பயனாளிகள் என மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 35 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளிக்கும் ஒரு நாள் வயதுடைய 1000 எண்ணிக்கையிலான நாட்டு கோழிக்குஞ்சுகள் வாங்குவதற்கான தொகையில் 50 சதவீதம் மானியத்தொகை ரூ.15 ஆயிரமும், ஒரு மாதத்திற்கு கோழி தீவனம் வாங்குவதற்கான தொகையில் 50 சதவீதம் மானியத்தொகை ரூ.22 ஆயிரத்து 500 மற்றும் கோழிக்குஞ்சு பொறிப்பான் வாங்குவதற்கான 50 சதவீதம் மானியத்தொகை ரூ.37 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ.75 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். கோழிகளுக்கு தீவனம், தண்ணீர் வழங்கும் சாதனங்களை பயனாளியே தனது சொந்த செலவில் கொள்முதல் செய்ய வேண்டும். சேவல் கோழிகளை குறைந்தபட்சம் 16 வாரங்களுக்கும், பெட்டை கோழிகளை குறைந்தபட்சம் 72 வாரங்களுக்கும் பயனாளிகள் வளர்க்க வேண்டும்.இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகள், 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 எண்ணிக்கையிலான கோழிகள் பராமரிப்புக்கு தேவைப்படும் குறைந்தபட்ச அளவிலான 2 ஆயிரத்து முதல் 2 ஆயிரத்து 500 சதுர அடி அளவுடைய கோழிக்கொட்டகை ஏற்கனவே வைத்திருத்தல் வேண்டும்.

கோழி வளர்ப்பிற்கு தேவையான தீவனம், தண்ணீர் குவளைகள் வைத்திருக்கவும் மற்றும் கோழி வளர்ப்பில் அனுபவம்- ஆர்வமுள்ள விவசாயிகளாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகள் அக்கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.2012 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்பட்ட கோழி அபிவிருத்தி திட்டத்தில் ஏற்கனவே பயனடைந்த பயனாளிகளாக இருக்க கூடாது. தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : Dindigul district ,
× RELATED மாற்றுத் திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்