×

நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் கனமழை 55 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

கடலூர், நவ.27: கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட  மழையால் 55 ஆயிரத்து 226 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நிவர் புயலாக உருவெடுத்து மரக்காணம் அருகே நேற்று அதிகாலை கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில், கடலூர் பகுதியில் பலத்த காற்று வீசியது. காலை 10 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. அதிக பட்சமாக கடலூர் பகுதியில் 29 செமீ மழை பதிவாகியது. கனமழை காரணமாக கடலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. புயல், மழையால் பாதிக்கப்பட்ட 55 ஆயிரத்து 226 பேர் 21 பல்நோக்கு சிறப்பு முகாம் உள்ளிட்ட 441 முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் 321 மரங்கள் முறிந்து விழுந்தன. 12 கால்நடைகள் உயிரிழந்தன. 21 கூரை வீடுகள் இடிந்து விழுந்தன. கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில் 77 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.  புயல் பாதிப்பால் மலை கிராமங்களான ராமாபுரம், எம்.புதூர், ேஜடர்பாளையம்,  குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதியில் 200 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து  விழுந்தன. மணிலா மற்றும்  பன்னீர் கரும்பு சாகுபடியும்  பாதிக்கப்பட்டது. 3ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.புயல், மழையால் நேற்று முன்தினம் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று மாலை வரை மின்சாரம் வழங்கப்பட வில்லை.

சொத்திக்குப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்ததால் படகுகள் சாலை பகுதிக்கு அடித்து செல்லப்பட்டது. அங்குள்ள மீனவ மக்கள் பாதுகாப்புடன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 ஆயிரம் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை குறைந்த நிலையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பேருந்து சேவை தொடங்கியதுபுயல், மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டது. புயல் கரையை கடந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் பேருந்துகள் ஓடத் தொடங்கின. இதே போன்று புயல் காரணமாக மூடப்பட்டிருந்த கடைகளும் நேற்று மாலை திறக்கப்பட்டன.

Tags : Cuddalore district ,paddy fields ,
× RELATED மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி...