படுகை அணைகள் நிரம்பி வழிகின்றன வெள்ளத்தில் தத்தளிக்கும் புதுவை

புதுச்சேரி, நவ. 27: புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக பெரிய அளவில் சேதம் ஏற்படாவிட்டாலும் கனமழையால் நகரப்பகுதிகள் வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது.

புதுச்சேரி  அடுத்த மரக்காணம் பகுதியில் நிவர் புயலானது கரையை கடக்கும்  நேரத்தில்  இடைவிடாமல் மழை பெய்து  கொண்டிருந்தது. இரவு 11 மணியில் இருந்து புயல் வீசியதும், காற்றும்,  மழையுமாக சுழன்றடித்தது. அதிகாலை வரை வீசிய புயலால் புதுச்சேரியின்  நகரத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனை  அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வர்த்தக  சபை, பாரதி பூங்கா, பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே, சுய்ப்ரேன் வீதி,  அரசு பொதுமருத்துவமனை அருகே,  மாதாகோயில் உள்ளிட்ட பல இடங்களில்   புயலில் சாய்ந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில்  தீயணைப்பு, பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு  வருகின்றனர்.  தாழ்வான  பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள்,  அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இரவு முழுவதும் பெய்த மழையில் முக்கிய  சந்திப்புகளான இந்திராகாந்தி சிலையை சுற்றி திடீர் ஏரியே உருவாகிவிட்டது.முக்கியமான  சந்திப்பு என்பதால், இருசக்கர வாகனங்கள், கார்கள் தண்ணீரில் நீந்தியபடியே  செல்ல முடிந்தது. வாகனங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பழுதாகி நடுவழியில்  நின்று போனது.

 மேலும் காராமணிக்குப்பம், மணிமேகலை பள்ளி அருகில்,  பூமியான்பேட்டை, ரெயின்போநகர், கிருஷ்ணாநகர், பாவாணர்நகர், நடேசன் நகர்  உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.சாலைகளில்  தண்ணீர் ஆறாக ஓடுவதால் மக்கள் வெளியே வரமுடியவில்லை. விஷபூச்சிகள்,  பாம்புகள் தண்ணீரில் ஊர்ந்து வந்ததால் மக்கள் அச்சத்துடன் இரவை கழித்தனர்.வீராம்பட்டினம்-  அரியாங்குப்பம் சாலையில் மரம் விழுந்ததால் வீராம்பட்டினம் கிராமம் அடியோடு  துண்டிக்கப்பட்டது. இதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு  வருகின்றனர். நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் முழுவதும் வெள்ள நீரால்  நிரம்பியது. அந்த இடமே குளமாகி மாறிவிட்டதால், தண்ணீரில் மிதந்து  கொண்டிருந்த மீன் விற்கும் பாக்ஸ்கள், உபரகரணங்களை மீனவ பெண்கள் மீட்டனர்.

இந்திராகாந்தி  சிலை, புஸ்சி வீதி, நெல்லித்தோப்பு சிக்னல், அண்ணாநகரில் தேங்கிய மழை நீர்  ஜெனரேட்டர் இயந்திரம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.முதலியார்பேட்டை,  அரியாங்குப்பம் உப்பளம் ஆகிய பகுதிகளின் தாழ்வான பகுதிகளை வெள்ளம்  சூழ்ந்துள்ளது. புதுச்சேரியின் பிரதான காய்கறி, பூ மார்க்கெட்டுகளில்  தண்ணீர் தேங்கியதால், திறக்கப்படவில்லை. இதுவரை புதுச்சேரியில் 10க்கும்  மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்ததாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்  தரப்பட்டுள்ளது. இதுவரை உயிர்சேதம் ஏதும் பதிவாகவில்லை. மழை காரணமாக  பிரதான ஏரிகளான ஊசுட்டேரி, பாகூர், கனகன் ஏரிக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது. சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பிள்ளையார்குப்பம் செல்லிப்பட்டு, உறுவையாறு உள்ளிட்ட படுகை அணைகள் நிரம்பி வழிந்தன. வில்லியனூர், திருக்கனூர், பாகூர் பகுதிகளில்  பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை  உள்ளிட்ட பயிர்கள் கடும் சேதமடைந்தது. இரவில் நிறுத்தப்பட்ட மின்சாரம் மாலைக்குள் 90 சதவீதம் பகுதிகளுக்கு மீண்டும் வழங்கப்பட்டது. மழை  மற்றும் புயலால் சேதமடைந்த பகுதிகளை முதல்வர் நாராயணசாமி காரில் சென்று  பார்வையிட்டர்.  

Related Stories: