×

நிவர் புயலின் கோரத் தாண்டவத்தால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன: வீட்டில் முடங்கிய பொதுமக்கள்; உணவு, உடையின்றி தவிப்பு

மாமல்லபுரம்: வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்  தொடர்ந்து கனமழை பெய்தது. மாமல்லபுரம்  - காரைக்கால் இடையே புயல் நேற்று அதிகாலையில் கரையை கடந்தது. இதனால் 2மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. முன்னதாக, மாவட்டங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர், போலீசார், வருவாய்த்துறையினர் தயார்நிலையில் இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செங்கை மாவட்டத்தில் கடலோர பகுதியில் குடிசைகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் வசித்த 3000 பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, உடைகள் வழங்கப்பட்டன.

நிவர் புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்புருஷம், ஐந்து ரதம், திருக்கழுக்குன்றம் சாலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்றால், 10க்கும் மேற்பட்ட மரங்களும், 15க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதில் முறிந்து விழுந்த மரங்களை பேரிடர் மீட்பு குழு மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். சேதமான மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதிகளில் பலத்த மழை மற்றும் சூறைக்காற்றினால் பாதிக்கப்படட 150 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, உடைகள் வழங்கப்பட்டன. மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகும் நிலையில் இருந்தது. அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 150க்கு மேற்பட்டோரை மீட்டு, 5 இடங்களில் பாதுகாப்பாக தங்கவைத்தனர். திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பகுியில் நிவர் புயலால், பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், வாயலூர் ஆயப்பாக்கம், நல்லாத்தூர், நெரும்பூர், விட்டிலாபுரம், பாண்டூர், வல்லிபுரம், வழுவதூர், எச்சூர் உள்பட பல்வேறு கிராமங்களில் புளிய மரம், மாமரம், வாழை, தென்னை மரம், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையில், வயல்வெளிகளில் மழைநீர் நிரம்பி பயிர்கள் சேதமடைந்தது. புதிதாக பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட வாயலூர் மற்றும் வல்லிபுரம் தடுப்பணைகள் முழுமையாக நிரம்பி உபரிநீர் கடலில் கலக்கிறது.
செங்கல்பட்டு:  நிவர் புயலால், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 1,491 குடும்பங்களை சேர்ந்த 6,538 பேர் 111 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 50 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. ஆடு, மாடுகள் என 40 கால்நடைகள் வெள்ள நீரில் சிக்கி பரிதாபமாக இறந்தன. கடந்த 3 நாட்களாக, செங்கல்பட்டு அண்ணா நகர், தேசிக நகர், மகாலட்சுமி நகர், ராமகிருஷ்ணா நகர், பவானி நகர், மேலமையூர், ஆலப்பாக்கம், வல்லம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் சூழந்துள்ளது.
இதனால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல், வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மழைநீர் வெளியேற வழியில்லாததால், கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

* செங்கை, காஞ்சி மாவட்டங்களில் 230 ஏரிகள் நிரம்பின
தொடர்ந்து பெய்த கனமழையால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 230 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. இதில் பொத்தேரி, நந்திவரம், காட்டாங்கொளத்தூர், தென்மேல்பாக்கம், ஆத்தூர், வடபாதி ஆகிய ஏரிகள் உடையும் நிலையில் உள்ளன. இதனால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். மேலும், செங்கல்பட்டு அருகே வடகால் பகுதியை மழைநீர் சூழ்ந்துள்ளதால் தீவு போன்று காட்சியளிக்கிறது. இங்கு 500 குடும்பங்கள் தவித்து வருகின்றன. மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள புக்கத்துறை, வையாவூர், கொளம்பாக்கம், பழையனூர், வளையபுத்தூர், கருணாகரச்சேரி, சித்தாத்தூர். கடமலைபுத்துர், காட்டுக்கூடலூர், சிறுபேர் பாண்டி உள்பட 22 ஏரிகள் நிரம்பி உள்ளன.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 150க்கும் மேற்பட்ட ஏரிகளில், சுமார் 44 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மற்ற ஏரிகள் இன்று வரை மழை நீடிக்கும் பட்சத்தில் முழுமையாக நிரம்பும் என கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 284 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. இதில் வையாவூர், நத்தப்பேட்டை, எறையூர் தேவனேரி, தாத்தனூர், குண்டுப் பெரும்பேடு, ஆரனேரி பெரிய ஏரி உள்பட 284 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அதில், 281 ஏரிகள் 75 சதவீதமும், 245. ஏரிகள் 50 சதவீதமும், 97 ஏரிகள் 25 சதவீதமும், 1 ஏரி 25 சதவீதத்துக்கு குறைவாகவும், 1 ஏரி நீர்வரத்து இல்லாமலும் உள்ளது.

* மொட்டை மாடியில் மக்கள் தஞ்சம்
செங்கல்பட்டு மாவட்டத்தில், நிவர் புயால் பெய்த கனமழையால் செங்கல்பட்டு, மறைமலைநகர், சிங்கபெருமாள் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உபரிநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீஞ்சல்மடு அணை நிரம்பி மகாலட்சுமி நகரை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் கடும் அவதியடைந்த மக்கள், தங்களது வீடுகளின் மொட்டை மாடியில் தஞ்சமடைந்தனர்.

* பாலாற்றில் வெள்ளப்பெருக்கு
செங்கல்பட்டு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்கிறது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கொளவாய், ஆத்தூர், வடபாதி, திம்மாவரம் உள்பட பல்வேறு ஏரிகள் முழுவதும் நிரம்பின. இந்த ஏரிகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர், பல மாதங்களாக  வறண்டு கிடந்த பாலாற்றில் செங்கல்பட்டு - மாமண்டூர் இடையே கரை புரண்டு ஓடியது. இதனால், பூதூர் - ஈசூர், வாயலூர் தடுப்பணைகள் நிரம்பி, பல லட்சம் கனஅடி தண்ணீர் கல்பாக்கம் அருகே வீணாக கடலில் கலந்தது. தமிழக அரசு சார்பில் நல்லாத்தூர், மணப்பாக்கம், ஆத்தூர் உள்பட 5 இடங்களில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை. இங்கு தடுப்பணைகளை கட்டி இருந்தால் மழைநீர் வீணாக கடலில் கலந்து வீணாவதை தடுத்து இருக்கலாம் என பாலாறு படுகை விவசாயிகள் சங்கம், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகள், நெல் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Tags : storm ,civilians ,Nivar ,home ,Suffering ,
× RELATED கரூர் சுக்காலியூர் அருகே சரிந்து...