×

தொடர் மழை, காற்றால் வாழை மரங்கள் சாய்ந்தன

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு,ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் நிவர் புயல் காரணமாக இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குளம் குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன குறிப்பாக பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் நீர் தேக்க அணை வேகமாக நிரம்பி உபரி நீர் தொடர்ச்சியாக வருவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடுகிறது. மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைத்து  வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் கரை பகுதியில் இருக்கக்கூடிய சாமந்தவாடா, நெடியம் கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றின் இடையில் தரைப்பாலம் கடக்க வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆற்றுப்படுக்கை கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று முகாம் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய பெய்த மழைக்கு பெரும்பாலான ஏரி குளங்கள் நிரம்பி காணப்படுகிறது.

அதேபோல் கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் அணை முழு கொள்ளளவை எட்டி இருப்பதால், உபரிநீர் நேற்று பிற்பகல் 12 மணியளவில் திறக்கப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 1100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாய கட்டத்தை எட்டி இருக்கிறது. பூண்டி நீர்த்தேக்கத்திலும் தண்ணிர் அதிகரித்து வருகிறது. பலத்த காற்று வீசியதில் பள்ளிப்பட்டு அருகே கீலப்பூண்டி,அத்திமாஞ்சேரிப்பேட்டையில் ஆகிய பகுதிகளில் சுமார் 1,000 வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. தொடர் மழைக்கு மின்சாரம் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் வழக்கமான பணிகள் தொடர முடியாமல் அவதிப்பட்டனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...