பல கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட அடையாற்றின் கரை உடைந்ததால் 4000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது: தரை தளம் மூழ்கியதால் மக்கள் மாடியில் தஞ்சம்

சென்னை: தாம்பரம் அருகே வரதராஜபுரம் ஊராட்சி, ராயப்பா நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியை ஒட்டி அடையாறு ஆற்றுப்படுகை அமைந்துள்ளது. மணிமங்கலம், மண்ணிவாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம் உள்பட 10க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் இந்த ஆற்றுப்படுகை வழியாக கடலில் கலக்கிறது. கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையால், மேற்கண்ட ஏரிகளில் இருந்து தண்ணீர், வேகமாக ஆற்றுப்படுகை வழியாக செல்கின்றது.

இந்நிலையில், நேற்று மாலை ராயப்பா நகர் அருகே இந்த அடையாறு ஆற்றின் கரை திடீரென உடைந்ததால் ராயப்பா நகர், விஜய் நகர், மஞ்சு பவுண்டேசன், அமுதம் நகர், சுந்தர் நகர், உள்பட 20 நகர்களில் உள்ள சுமார் 4 ஆயிரம் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. தரை தளம் முழுவதும் மூழ்கியதால், மக்கள் மாடியில் தஞ்சமடைந்தனர். ஒவ்வொரு மழைக்கும் ராயப்பா நகர் உள்பட சுமார் 10 நகர்கள் தண்ணீர் மிதக்கும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. ஆனால், இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்களை சோமங்கலம் போலீசார் வீடு வீடாக சென்று, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப முடிவு செய்தனர். அதன்படி, அங்கு சென்று பொதுமக்களை அழைத்தபோது யாரும் வரவில்லை. 2 குடும்பத்தினர் மட்டும், சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்தனர். அவர்களை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதேப்போல், முடிச்சூர் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்துக்கு தடை விதிக்கபட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சமீபத்தில், பல கோடி செலவில் அடையாறு ஆற்றினை தூர்வாரி கரை அமைத்தனர்.

ஆனால் முறையாக பணி செய்யாததால், அடையாறு ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 20 ஆயிரம் மக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். இந்த பகுதியில் 2 நாட்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள், இன்று வரை சமாளிக்கும் வகையில் உணவு குடிநீர் சேமித்து வைத்துள்ளோம். நாளை என்ன நிலைமை என எங்களுக்கே தெரியவில்லை. இங்குள்ள மக்களை கணக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அரசு வழங்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories:

>