சென்னை மாநகராட்சியில் 152 கட்டிடங்கள் மக்கள் வசிக்க தகுதியற்றவை: ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையில் சென்னைக்கு கிடைக்கும் மழையின் அளவு 80 செ.மீ. கடந்த 36 மணி நேர காலகட்டத்தில் மட்டும் சென்னையில் 23 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளது. புயல் மீட்பு பணியாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

1913 என்ற அவசர எண் மூலமும், அனைத்து மண்டல அலுவலக எண்கள் மூலமும் 58 நீர் தேக்கம் குறித்த புகார்கள் உட்பட 302 புகார்கள் பொதுமக்களிடமிருந்து வந்துள்ளன. அதில் நேற்று காலை வரை 132 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மீதமுள்ள 170 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேளச்சேரி, ராம் நகர், புளியந்தோப்பு போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இயற்கையாக அமைந்த நில அமைப்பின் காரணமாக நீர் வடியாமல் தேங்கியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதிகளில் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. சென்னையில் உள்ள 210 நீர் நிலைகள் அனைத்தும் புனரமைத்து நீர் மேலாண்மைக்கு பயன்படுத்த திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், அடையாளம் காணப்படாமல் உள்ள நீர் நிலைகளையும் இனி வரும் காலங்களில் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னையில் 152 கட்டிடங்கள் பொதுமக்கள் வசிக்க தகுதியில்லாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் உரிய கால அவகாசம் அளித்து அதன் பின்பும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் நீதிமன்ற உத்தரவின்படி அந்த கட்டிடங்களை இடிக்க முடிவெடுக்கப்படும், என்றார்.

Related Stories: