×

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் எல்ஐசி அலுவலகத்தை முற்றுகை முயற்சி, மறியல்:590 பேர் கைது

திருச்சி, நவ. 27: திருச்சியில் எல்ஐசி அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்த அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த 590 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் நேற்று அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நேற்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி மத்திய அரசு அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிஐடியூ திருச்சி மாவட்ட செயலாளர் ரெங்கராஜ், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜோசப் நெல்சன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன் திரண்டு பேரணியாக ஜங்ஷனில் உள்ள எல்ஐசி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.

பேரணியில், முறைசாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் நபர் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி, 10 கிலோ கோதுமை வழங்க வேண்டும். தொழிலாளர் நல சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். 3 வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி நகர்புறத்திற்க்கு விரிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஒத்தக்கடை அருகே வந்த அவர்களை போலீசார் மறித்தனர். இதனால் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 80 பெண்கள் உள்பட 590க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து 8க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றிச்சென்று அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன் சிஐடியூ மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் தலைமையில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மணப்பாறை: மணப்பாறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் இந்திரஜித் தலைமையில் கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக வந்து ரவுண்டானா பகுதி பெரியார் சிலை அருகே திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் திருவோடு ஏந்தியும், காய்கறி மாலை அணிந்தும், சாவுமணி அடித்தும், மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர். திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே ஓஎப்டி தொழிற்சங்க கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் ஆலையின் முன் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக பணி நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தாமதமாக பணிக்கு சென்றனர்.

அதேபோல எச்ஏபிபி தொழிற்சாலையில் போராட்டக் கூட்டு குழு ஒருங்கிணைப்பாளரான பிரபாகரன் தலைமையில் 50 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெல் நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவெறும்பூர் கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சிவராஜன் தலைமை வகித்தார். ஏஐடியூசி தொழிற்சங்க தலைவர் பக்கிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி செல்வராஜ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். துறையூர்: துறையூர் மற்றும் உப்பிலியபுரத்தில் இந்திய கம்யூ, மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் அதன் சார்பு தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

Tags : Trichy ,unions ,government ,LIC ,
× RELATED திருச்சியில் ஊஞ்சல் விளையாடிய சிறுவன் கழுத்தில் துண்டு இறுக்கி பலி