விசைப்படகுகளுக்கு அனுமதி மறுப்பு

சேதுபாவாசத்திரம், நவ. 27: தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சின்னமனை, பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம், கணேசபுரம் உட்பட 32க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 4,500 நாட்டுப்படகுகள் உள்ளன. மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 144 விசைப்படகுகள் உள்ளன. திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் விசைப்படகுகளிலும், பிற நாட்களில் நாட்டுப்படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வங்க கடலில் உருவாகி இருந்த நிவர் புயல் நேற்று நள்ளிரவு கரையை கடந்த்து. இதனால் தஞ்சை மாவட்டத்தில் வானம் நேற்று முன்தினம் வரை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நிவர் புயலால் கடந்த 23ம் தேதி முதல் விசைப்படகுகளுக்கு அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இந்நிலையில் 4வது நாளாக நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 144 விசைப்படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். 4 நாட்களாக  ரூ.2 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

Related Stories: