×

மீனவர்கள் 4 வது நாளாக கடலுக்கு செல்லவில்லை நிவர் புயலால் அதிக பாதிப்பு இல்லை மின் துண்டிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி

தஞ்சை, நவ. 27: தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நிவர் புயல், மழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும மலைப்பயிர்கள்துறை இயக்குனருமான சுப்பையன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் புயல், மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இதற்காக 122 நிவாரண முகாம்களில் 1,606 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டனர். 1,761 ஆண்கள், 2,261 பெண்கள், 1,344 குழந்தைகள் என மொத்தம் 5,321 பேர் பாதுகாப்பாக தங்க வைப்பட்டிருந்தனர். தற்போது புயல், மழையால் தஞ்சை மாவட்டத்துக்கு எந்த பாதிப்பும் இல்லாததால் அவர்கள் திரும்ப தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்பி செல்கின்றனர். தஞ்சை மாவட்டத்தில் 20 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை சரி செய்யப்பட்டு மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 7 இடங்களில் விழுந்த மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. மாவட்டத்தில் இதுவரை 34 கூரை வீடுகள், ஒரு ஓட்டு வீடு பகுதியாகவும், ஒரு கூரை வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. கால்நடைகளில் ஒரு மாடு, 2 ஆடுகள் இறந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

புயல் தொடர்பாக 49 புகார் மனுக்கள் பெறப்பட்டதில் 48 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. ஒரு மனு நடவடிக்கையில் உள்ளது. மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக சில பகுதிகளில் ஏற்பட்ட மின் துண்டிப்பு சரி செய்யும் பணி துரிதமாக நடந்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களால் அகற்றும் பணி நடந்து வருகிறது. சம்பா, தாளடி பயிர்களுக்கு இந்த புயல், மழையால் எந்த பாதிப்பும் இல்லை. வரும் டிசம்பர் 15ம் தேதி வரை பயிர் காப்பீடு செலுத்தலாம் என்றார். தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 618 ஏரி, குளங்கள் உள்ளன. இதில் 174 ஏரி, குளங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன. 199 ஏரி, குளங்கள் 74 முதல் 100 சதவீதம் வரையும், 135 ஏரி, குளங்கள் 50 முதல் 75 சதவீதம் வரையும், 83 குளங்கள் 25 முதல் 50 சதவீதம் வரையும், 27 குளங்கள் 25 சதவீதம் வரையும் நிரம்பியுள்ளன. டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் என்றார்.

38.04 மி.மீட்டர் மழை
தஞ்சை மாவட்டத்தில் நேற்று 38.04 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 1,098.24 மி.மீட்டராகும். இதுவரை 57 சதவீதம் மழை பதிவாகியுள்ளது. மாவட்ட கட்டுப்பாட்டு அறை, கோட்ட அலுவலகங்கள், அனைத்து வட்ட அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் கோட்ட அளவில் 3 கண்காணிப்பு அலுவலர்களும், சார் ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் வட்ட அளவில் 9 மண்டல அலுவலர்களும் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைக்காக தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் கூறினார்.

Tags : Fishermen ,sea ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...