×

அறந்தாங்கியில் பரபரப்பு நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் புதுகையில் 12 இடங்களில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, நவ.27: அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டமும், இரு இடங்களில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் போன்றவற்றை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று (26ம் தேதி) பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரில் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில், தொமுச மாவட்ட செயலர் கே.கணபதி, மாவட்ட தலைவர் ரத்தினம், சிஐடியூ மாவட்ட செயலர் தர், துணைத் தலைவர் ஜியாவுதீன், ஏஐடியூசி மாவட்ட தலைவர் தர்மராஜன், மாவட்ட செயலர் சிங்கமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 126 பேரை போலீசார் கைது செய்தனர்.

அறந்தாங்கியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, கீரனூர், கந்தர்வகோட்டை, பொன்னமராவதி, அரிமளம், மணமேல்குடி உள்ளிட்ட 10 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. வேலைநிறுத்தம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினரும் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால் பெரும்பாலான வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் இந்தியன் வங்கி முன்பு நடைபெற்றது. ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க மாநில தலைவர் ராமதுரை தலைமை வகித்தார். மாவட்ட வங்கி ஊழியர் சங்க மாவட்ட துணை பொதுச் செயலர் அருணாசலம், கனரா வங்கி ஊழியர் சங்க செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், இந்தியன் வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாகக் கூடாது, வாராக்கடனை முழுமையாக வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல, காப்பீட்டுக் கழக அலுவலகங்களிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. பகலில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டதால் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை.

Tags : Trade unions ,places ,Aranthangi ,strike ,
× RELATED வேலை நிறுத்தம் தொடர்பாக...