×

பல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்தம், மறியல்

கரூர், நவ. 27: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 383 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழக விவசாயத்தையும், விவசாயிகளையும் சீரழிக்கும் 3 வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டும். இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்த சட்டம் 2020ஐ கைவிட வேண்டும். தூய்மை காவலருக்கு அரசு அறிவித்த ரூ.3 ஆயிரம் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக மாற்றி விவசாயிகளுக்கு பயன் பெறும் வகையில் வேலைத் திட்டத்தினை இணைத்திட வேண்டும். படித்து வேலையில்லா இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க வேண்டாம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடந்த சில நாட்களாக அகில இந்திய வேலை நிறுத்த மறியல் போராட்டத்தை முன்னிட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் எல்பிஎப், ஐஎன்டியூசி, சிஐடியூ, ஏஐடியூசி, ஏஐசிசிடியூ, எச்எம்எஸ் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில், கரூர், குளித்தலை, தரகம்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய நான்கு பகுதிகளில் நேற்று தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற 151 பெண்கள் உட்பட 383 பேரை அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 163 பேர் கைது செய்யப்பட்டனர்.

குளித்தலை: இதேபோல் குளித்தலையில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 48 பெண்கள், 24 ஆண்கள் ஆக மொத்தம் 72 பேரை போலீசார் கைது செய்தனர். எல்ஐசி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: அதேபோல் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொது இன்சூரன்ஸ் பங்கு விற்பனையை கைவிட வேண்டும். பொதுத் துறைகளை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டாம். எல்ஐசியின் பங்குகளை விற்க வேண்டாம். இந்திய மக்கள் சேமிப்பு அந்நியரிடம் கொள்ளை போக அனுமதிக்க கூடாது. வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வேண்டும். கிராமப்புற வேலையை இரண்டு நாட்களாக உயர்த்த வேண்டும். வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு ரூ.7,500 வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் குளித்தலை எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் கிளை தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் ஊழியர்கள் சிவகுமார், ராமன், ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். குளித்தலை எல்ஐசி கிளையின் பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் பாலிசிதாரர் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது. அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து, சாலை மறியலில் ஈடுபட்ட 81 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு கணேசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜாமுகமது, ஒன்றிய செயலாளர் கணேசன், ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Tags : Trade union confederation strike ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...