×

பெண்கள் உள்பட 383 பேர் கைது மகளிர் சக்தி விருதுக்கு பெண்கள், குழுக்கள் விண்ணப்பிக்கலாம்

கரூர், நவ. 27: மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் வழங்கப்படும் மகளிர் சக்தி விருதுக்கு தகுதி வாய்ந்த, தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். மகளிருக்காக தனித்துவமான சேவை குறிப்பாக, பின்தங்கிய மற்றும் பாதிப்படைந்துள்ள பெண்களுக்கான சேவை புரிபவர்களை அங்கீகரிக்கும் விதமாக மகளிர் சக்தி விருது எனப்படும் மகளிருக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி, விழிப்புணர்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பங்களிப்பு, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்துதல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் சிறந்த பங்களிப்பு சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் மகளிர் சக்தி விருது வழங்கப்படுகிறது.தனிப்பட்ட நபர்களுக்கான விருதுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

நிறுவனங்களுக்கான விருதுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான சேவை புரியும் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படும் மகளிர் சக்தி விருது (நர்சரி சக்தி புரஸ்கார்) எனப்படும் தேசிய விருதுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் www.narishaktipuraskar.wcd.gov.in கொடுக்கப்பட்டுள்ளன.
தகுதி வாய்ந்த நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோரால் இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக ஜனவரி 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்களில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச மகளிர் தின முந்தைய வாரத்தில் டெல்லியில் குடியரசு தலைவரால் விருது வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : women ,groups ,
× RELATED மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கூடுதல்...