×

மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்

தர்மபுரி, நவ.27: மத்திய அரசை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்ட சிஐடியூ, ஏஐடியூசி, எல்பிஎப், ஐஎன்டியூசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பொது வேலை நிறுத்தப்போராட்டம், நேற்று பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடந்தது. போராட்டத்திற்கு சிஐடியூ மாநில செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். தொமுச அன்புமணி, சண்முகராஜ், சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி மணி வரவேற்றார். ஐஎன்டியூசி தங்கவேல், ஏஐசிசிடியூ முருகன், ஐஎன்டியூசி ரமேஷ் உள்ளிட்ட பலர் கொட்டும் மழையில் குடைபிடித்து கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்றுகாரணமாக, கடந்த 8 மாதமாக வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அரசு ₹7500 வழங்க வேண்டும். சிப்ஹாட் பணியை விரைவு படுத்த வேண்டும். மொரப்பூர் - தர்மபுரி ரயில் இணைப்பு பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதேபோல், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சார்பில், பொதுத்துறைகளை தனியார் மயாக்கும் முயற்சியை கண்டித்து, எல்ஐசி அலுவலகம் முன் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் சந்திரமௌலி தலைமை வகித்தார். கோட்ட இணை செயலாளர் மாதேஸ்வரன், கிளை செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அரூர்: அரூரில் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வேலை நிறுத்தம் போராட்டம் கச்சேரிமேட்டில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் பழனி தலைமை தாங்கினார். அரூர் அன்பழகன், ஏஐடியுசி நடராஜன், சிஐடியு ரகுபதி, மாவட்ட அமைப்பு செயலாளர்கள் உண்ணாமலை, சின்னப்பாப்பா, நிர்மலா, ராமன், சொக்கலிங்கம், ராமஜெயம், பழனி, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : unions ,government ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...