×

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் 8 இடங்களில் சாலை மறியல்

நாமக்கல், நவ.27: நாமக்கல் மாவட்டத்தில், மத்திய அரசை கண்டித்து 8 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 59 பெண்கள் உள்பட 442 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். நாமக்கல்லில், மாவட்ட மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், நேற்று வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்களுக்கு எதிரான கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள், தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும் திரும்பபெற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர் முன்னேற்ற சங்க கவுன்சில் தலைவர் பழனியப்பன், ஏஐடியூசி. மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன், ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் சிவராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதையடுத்து மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருமணமண்டபத்தில் போலீசார் தங்கவைத்தனர்.

இதேபோல் ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், எருமப்பட்டி, மொளசி, நாமகிரிப் பேட்டை, பரமத்திவேலூர் என 8 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட 59 பெண்கள் உள்பட மொத்தம் 442 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். பொது வேலை நிறுத்தத்தையொட்டி, நகரில் உள்ள ஒரு சில வங்கிகள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கியது. மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கியது. மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை அலுவலங்களில் மொத்தம்  20 ஆயிரத்து 862 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களில் நேற்று, 20 ஆயிரத்து 107 பேர் நேற்று பணிக்கு வந்திருந்தனர்.திருச்செங்கோடு இந்தியன் வங்கி முன்பு நடந்த மறியல் போராட்டத்தில், எல்பிஎப் சுந்தரமூர்த்தி, ஏஐடியூசி ஜெயராமன், சிஐடியூ செங்கோடன்,  எல்பிஎபி ராமலிங்கம், நந்தகுமார்  ராமகிருஷ்ணன் ராயப்பன்,  மாதேஸ்வரன்,  சுப்ரமணி, கோபிராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சார்ந்த 15 பெண்கள் உள்ளிட்ட 192 பேர் கைது செய்யப்பட்டனர். எலச்சிபாளையம் தபால் நிலையம் முன்பு நடந்த மறியலில், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், ஏஐடியூசி ஜெயராமன், 25 பெண்கள்  உள்பட 47 பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிபாளையம் பஞ்சாப் நேஷனல் வங்கி முன்பு, மத்திய அரசை கண்டித்து, சிஐடியூ மாவட்ட தலைவர் அசோகன் தலைமையில் நிர்வாகிகள் பாலசுப்ரமணி, வெங்கடேசன், செல்வராஜ், மாரியப்பன் உள்ளிட்ட பலர் மறியலில் ஈடுபட்டனர். கொக்கராயன்பேட்டையில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் துரைசாமி தலைமையிலும், வெப்படையில் சிஐடியூ பஞ்சாலை தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தனபால் தலைமையிலும், குமாரபாளையத்தில் மார்க்சிஸ்ட் நகர செயலாளர் பாலுசாமி தலைமையிலும் பலர் மறியலில் ஈடுபட்டனர்.

Tags : unions ,places ,government ,
× RELATED புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்