×

வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆய்வு கூட்டம்

ஊட்டி, நவ.27: ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆய்வு கூட்டம்  கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நடந்தது. இதில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குநர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கருணாகரன் தலைமை வகித்து பேசியதாவது: கடந்த 16ம் தேதியன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் வரும் 15ம் தேதி வரை தெரிவிக்கலாம். கடந்த 14.2.2020 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 76 ஆயிரத்து 691 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தார்கள். பின்னர் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான பணிகளில் 4,938 வாக்காளர்கள் நீக்கப்பட்டு கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 545 ஆண்களும், 2 லட்சத்து 96 ஆயிரத்து 196 பெண்கள், 12 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 753 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தகுதி வாய்ந்த எந்தவொரு வாக்காளரும் ஒரு போதும் வாக்காளர் பட்டியலில் விடுபட கூடாது. அதேபோல் தகுதி இல்லாத நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது. இதனை முறையாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே பட்டியலை பார்வையிட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும். பொதுமக்களின் பார்வைக்காக ஆர்டிஒ., தாசில்தார் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமும் தெரிந்து கொள்ளலாம். கடந்த 21,22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 9,115 படிவங்கள் பெறப்பட்டது. இவற்றை முறையாக ஆய்வு செய்து சேர்ப்பு, நீக்கல் செய்ய வேண்டும். வரும் டிசம்பர் மாதம் 12,13 ஆகிய தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். மாதந்தோறும் நடைபெறும் பழங்குடியினருக்கான முகாம்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்க வேண்டும். அந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத நபர்களை பெயர் சேர்க்கும் வகையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற படிவங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்குசாவடி நிலை முகவர்கள் நியமிக்காத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை வலியுறுத்தி உடனடியாக முகவர்களின் பெயர் பட்டியலை பெற்று தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் அடையாள அட்டைகளில் புகைப்படம் தெளிவாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த தேர்தலின் போது குறைவாக மற்றும் அதிகமாக பதிவான வாக்குகள் உள்ள வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் கண்காணித்து செம்மையான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுபாட்டு அறையில் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர்கள் மோனிகா ரானா, ரஞ்சித்சிங், கூடலூர் ஆர்டிஒ., ராஜ்குமார், தேர்தல் வட்டாட்சியர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Review meeting ,
× RELATED தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு...