×

புயல், கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு அமைச்சர், கலெக்டர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை, நவ.27: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், நிவர் புயல் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அதன்படி, சாத்தனூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 119 அடியில் தற்போது 89.55 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. மொத்த கொள்ளளவான 7,321 மில்லியன் கன அடியில், 2,435 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 381 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.அதேபோல், குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 60 அடியில், 37.32 அடி நிரம்பியிருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மிருகண்டா அணையின் மொத்த உயரமான 22.97 அடியில், தற்போது 7.22 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.இந்நிலையில், ஜவ்வாதுமலை பகுதியில் பெய்த கனமழையால், மலையில் இருந்து காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. அதனால், ஜவ்வாதுமலையையொட்டி அமைக்கப்பட்டுள்ள படவேடு செண்பகத்தோப்பு அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 6 ஆயிரம் கனஅடி தண்ணீரையும் முழுமையாக ஏரிகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அதனால், கமண்டல நாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், செண்பகத்தோப்பு அணையை நேற்று காலை பார்வையிட்ட அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், புதிய ஷெட்டர்கள் மூலம் உபரி நீரை திறந்து வைத்தார். அப்போது, கலெக்டர் சந்தீப் நந்தூரி, கலசபாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது, உபரி நீர் திறக்கப்பட்டதால், கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
செண்பகத்தோப்பு அணையின் உயரம் 62.32 அடி, முழு கொள்ளளவு 287.00 மில்லியின் கனஅடி. தற்போது, அணையில் 57 அடி அளவு தண்ணீர் நிரம்பியிருக்கிறது. கொள்ளளவு 219 கனஅடி ஆக உயர்ந்துள்ளது. செண்பகத்தோப்பு அணையின் மதகுகள் பழுதாகி இருந்ததால், கடந்த 2007ம் ஆண்டு முதல் அதிகபட்சம் 47 அடி மட்டுமே தண்ணீரை நிரம்ப முடியும் என்ற நிலை இருந்தது. தற்ேபாது, ₹16.37 கோடி செலவில் 7 புதிய ரேடியல் ஷெட்டர்கள் புதுப்பிக்கப்பட்டதால், முதன்முறையாக முழு கொள்ளளவு நிரப்பும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கடந்த 2 நாட்கள் பெய்த மழையால், அணையின் முழு கொள்ளளவு நிரம்பியிருக்கிறது. அணையில் இருந்து தற்ேபாது திறக்கப்பட்டுள்ள 6 ஆயிரம் கனஅடி உபரி நீரால், போளுர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு மற்றும் ஆற்காடு தாலுகாவில் உள்ள 48 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. அதன்மூம், 7,497 ஏக்கர் பாசன வசதி பெறும்.

Tags : storm ,dam ,Shenbagathoppu ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்