×

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 47 ஆயிரம் ஏக்கர் நெல், வாழை, பப்பாளி பயிர்கள் சேதம்

வேலூர், நவ.27: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 47 ஆயிரத்து 338 ஏக்கர் நெல் பயிர்கள், வாழை, பப்பாளி மரங்கள் சேதமாகியுள்ளது. 77 வீடுகள் இடிந்து விழுந்தது. தமிழகத்தில் நிவர் புயல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நேற்று அதிகாலை கரையை கடந்தது. புயல் கரையை கடந்த மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் விவசாய நிலங்கள், வீடுகள், மின்கம்பங்கள், மரங்கள் சேதடைந்துள்ளன. வேலூர் மாவட்டத்தில் 36 வீடுகள் இடிந்து விழுந்தன. பலத்த காற்று வீசியதால் 26.53 ஏக்கர் வாழை, பப்பாளி மரங்கள் சேதமானது. 2 ஆடுகள் இறந்தது. 10 மின்கம்பங்கள், 57 மரங்கள் முறிந்து விழுந்தது. நீர்நிலைகளுக்கு அருகாமையிலும், மழைவெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் 25 முகாம்களில் 1,021 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பு பகுதிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் தாசில்தார்கள் அந்தந்த தாலுகாக்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் எஸ்பி செல்வகுமார் தலைமையில் மீட்பு பணி மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 வீடுகள் இடிந்து விழுந்தன. நெல், வாழை, கீரை உட்பட மொத்தம் 17,300 ஏக்கர் பயிர்கள் மழையில் சேதமடைந்தது. 4 கால்நடைகள் இறந்தது. 42 மின்கம்பங்கள், 300 மரங்கள் முறிந்து விழுந்தது. நீர்நிலைகளுக்கு அருகாமையிலும், மழைவெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் 5,600 பேர் 110 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பு பகுதிகளை கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் எஸ்பி மயில்வாகனன் தலைமையில் மீட்பு பணிகள், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 வீடுகள் இடிந்து விழுந்தன. நெல் பயிர்கள், 2,000 ஆயிரம் பப்பாளி மரங்கள், 1,000 வாழை மரங்கள் என்று 12 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்தது. கால்நடை ஒன்று இறந்தது. 8 மின்கம்பங்கள், 10க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது. சிறப்பு முகாம்களில் 750 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை பாதிப்பு பகுதிகளில் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் எஸ்பி விஜயகுமார் தலைமையில் மீட்பு பணிகள், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வீடுகள் இடிந்து விழுந்தன. நெல், வாழை உட்பட 30ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமானது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. 12 கால்நடைகள் இறந்துபோனது. 20 மின்கம்பங்கள், 100 மரங்கள் வரை முறிந்து விழுந்தன. சிறப்பு முகாம்களில் 7ஆயிரம் பேர் வரையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எஸ்பி அரவிந்த் தலைமையில் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களிலும் நிவர் புயல் பாதிப்பு காரணமாக பெய்த தொடர்மழை, பலத்த காற்றினால் 77 வீடுகள் இடிந்து விழுந்தன. மொத்தம் 47ஆயிரத்து 338 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தது. தொடர்ந்து விவசாய பயிர்கள் பாதிப்பு, கால்நடை பாதிப்பு, மின்கம்பங்கள் சேதம் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

Tags : Vellore ,districts ,Thiruvannamalai ,Tirupati ,Ranipettai ,
× RELATED மழைக்கு நெற்பயிர்கள் முற்றிலும் சேதம்