×

அகில இந்திய அளவிலான பொது வேலைநிறுத்தம் குமரியில் வங்கி, தபால் சேவைகள் முடக்கம் பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின

நாகர்கோவில், நவ.27: வருமானவரி செலுத்தும் வரம்புக்குள் வராத குடும்பத்தினர் அனைவருக்கும் மாதம்தோறும் ₹7500 ரொக்கமாக வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான மற்றும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும். மீனவர்களை பாதிக்கும் தேசிய மீன்வளக்கொள்கை 2020ஐ கைவிட வேண்டும். கட்டுமான, முறைசாரா தொழிலாளர் நலவாரிய குளறுபடிகளை நீக்கி ரூ.3 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும். குமரி மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் முந்திரி, மீன்தொழில் உள்ளிட்ட தொழில்களை பாதுகாக்க வேண்டும்.அரசு ரப்பர் கழக நிலம் 2 ஆயிரம் ஹெக்டரை வனத்துறைக்கு வழங்கும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் பொதுவேலை நிறுத்தம் நேற்று நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் அரசு பஸ்கள், மினி பஸ்கள், ஆட்டோ, டாக்சி, வேன்கள் போன்றவை வழக்கம்போல் ஓடின. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ராணித்தோட்டம் பணிமனைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டிருந்தனர்.

அரசு போக்குவரத்து கழக பஸ்கள் போதிய அளவில் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எல்.ஐ.சி, வங்கி ஊழியர்கள் சங்கங்கள், பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. இதனால் இந்த அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நேற்றும் பொதுவேலை நிறுத்தம் காரணமாக பல்வேறு வங்கிகளில் பணியாளர்கள் வருகை குறைவாக இருந்ததால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒரு சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பணியாளர்கள் யாரும் வருகை தராததால் பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது. இதனால் அந்த வங்கிகளுக்கு சென்ற வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

 குமரி மாவட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் ஆகியன போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டன. மொத்தம் 180 பொதுத்துறை வங்கி கிளைகளை சேர்ந்த ஊழியர்கள் 800க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் 90க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கி கிளைகளை சேர்ந்த பணியாளர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராமப்புற வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டது.  இதனை போன்று நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் பணியாளர்களின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. இதனால் வருகை தந்த வாடிக்கையாளர்கள் திரும்பி சென்றனர். மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களிலும் பணியாளர்கள் வருகை குறைவாக காணப்பட்டது. அங்கன்வாடி ஊழியர்களும் நேற்றைய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

Tags : Bank ,Kumari ,All India General Strike ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...