×

திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் ஓட்டம் நாகர்கோவிலில் பரபரப்பு

நாகர்கோவில், நவ. 27: நாகர்கோவில் அருகே உள்ள கரியமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், புத்தன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வாலிபர் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு இருசக்கர பழுதுபார்க்கும் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். பெண் பிஇ முடித்துள்ளார். திருமணத்தின் போது பணம், நகை மற்றும் சீர் வரிசைகள் செய்வதாக பெண் வீட்டார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிச்சயதார்த்தம் நடந்த போது 5 பவுன் நகையும், ரூ.2 லட்சமும் மணமகன் வீட்டிற்கு பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். திருமணத்தை நேற்று(26ம் தேதி) நடத்துவது என பெரியோர்கள் முடிவு செய்து இருந்தனர். இரு வீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட இருவரும் போனில் தங்களது வருங்கால வாழ்க்கையை பற்றி பேசி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மணமகன் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் மணமகனை தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த தகவல் பெண் வீட்டிற்கு தெரியவந்தது.

 அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார்கள் என்ன செய்வது என தெரியாமல் கலக்கம் அடைந்தனர். இந்த நிலையில் மணமகன், மணமகள் தரப்பினர் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்து, நடந்த விவரத்தை போலீசாரிடம் தெரிவித்தனர். மணமகனுக்கு வேறு எந்த பெண்ணுடன் காதல் உண்டா என்ற கோணத்தில் போலீசார்  விசாரணை நடத்தினர். தொடர்ந்து மணமகனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மணமகன் ஏதாவது கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றாரா? என்ற அடிப்படையில் வீட்டில் தேடினர். ஆனால் எந்த கடிதமும் சிக்கவில்லை. இதனையடுத்து மணமகனின் தம்பிக்கு, அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மணமகனின் பெற்றோர்கள் விரும்பினர். ஆனால் மணமகள் திருமணத்திற்கு சம்மதிக்க வில்லை.

 இதனையடுத்து இருதரப்பினரிடமும் போலீசார் பேசினர். அப்போது திருமணத்தை நிறுத்துவது என இருதரப்பினரும் தெரிவித்தனர். மணமகன் வீட்டார், நிச்சயதார்த்தம் அன்று பெண் வீட்டார் கொடுத்த 5 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கத்தை திரும்ப கொடுத்தனர். அதுபோல் பெண் வீட்டாரும், மணமகன் வீட்டில் போட்ட நகையை திரும்ப கொடுத்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்றனர். இதனால் நேற்று முன்தினம் இரவு கோட்டார் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் மாயமானதால், கரியமாணிக்கபுரத்தில் உள்ள மணமகன் வீடும், புத்தன்குடியிருப்பில் உள்ள மணமகள் வீடும் சோகத்தில் ஆழ்ந்தது.


Tags : wedding ,Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...