×

தாழ்வான பகுதிகளில் வசிப்போர்

திருவாரூர், நவ.25: திருவாரூர் மாவட்டத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக அரசின் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயல் பதிப்புகளை எதிர்கொள்ள திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 20 அலுவலர்கள் அடங்கிய 10 மண்டல அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் குழுக்களும், 8 அலுவலர்கள் அடங்கிய துணை கலெக்டர் நிலையிலான மண்டல அலுவலர்கள் குழுக்களும், வட்டார வாரியாக 115 அலுவலர்கள் அடங்கிய 10 வெள்ளத் தடுப்புக் குழுக்களும், சரக அளவில் வெள்ள நிவாரணப் பணிகளை செயல்படுத்த 88 அலுவலர்கள் அடங்கிய 29 குழுக்களும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் 48 அலுவலர்கள் அடங்கிய 12 மருத்துவ குழுக்களும், அரசு மருத்துமனைகளில் 32 அலுவலர்கள் அடங்கிய 8 மருத்துவ குழுக்களும், கால்நடை பராமரிப்புத்துறையில் 10 அலுவலர்கள் அடங்கிய 10 கண்காணிப்பு குழுக்களும், கால்நடை மருத்துவமனைகளில் 103 அலுவலர்கள் அடங்கிய 52 கால்நடை மருத்துவ குழுக்களும், 5 அலுவலர்கள் அடங்கிய 1 போக்குவரத்து அலுவலர்கள் குழுவும்,5 அலுவலர்கள் அடங்கிய 1 செய்தி வெளியீட்டு குழுவும், 22 அலுவலர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவும், 5 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய 5 உணவு பாதுகாப்புக் குழுவும், 51 அலுவலர்கள் கொண்ட 11 தகவல் அளிக்கும் குழுவும் ஆக மொத்தம் 689 அலுவலர்கள் அடங்கிய 151 குழுக்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் காவல்துறையில் நீச்சல் பயிற்சி பெற்ற 105 காவலர்களும், ஊர் காவல்படையை சோர்ந்த 20 ஊர்காவலர்களும், 30 தீயணைப்பு வீரர்களும், 3 ஆயிரத்து 180 முதல்நிலை பொறுப்பாளர்களும், 24 பாம்பு பிடிப்பவர்களும், 424 கால்நடைகளுக்கான முதல்நிலை பொறுப்பாளர்களும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் மூலம் 26 ஆயிரத்து 495 மணல் மூட்டைகளும், 98 ஆயிரம் காலி சாக்குகளும், 672 மெ.டன் மண் மற்றும் 4 ஆயிரத்து 413 சவுக்கு மரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரத்துறை மூலம் 12 துணை மின் நிலையங்களில் 5000 மின்கம்பங்களும், 70 கி.மீ மின்கம்பிகளும், 30 மின்மாற்றிகளும், மரம் அறுக்கும் கருவி 277ம், ஜே.சி.பி. இயந்திரம் 103ம், டிராக்டர்ஸ் 111ம், டீசல் பம்பு செட் 74ம், புல்டோசர் 2ம், நீர் இறைக்கும் பம்புகள் 6ம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 212 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, 249 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள 150 நியாய விலைக்கடைகளில் 3 மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய குடிமைப்பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கி வரும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் 24 மணி நேரமும் அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்களின் அவசர உதவிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் உள்ள 04366- 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் பேரிடர் பாதிப்பினை எதிர்கொள்வதற்கு தயாராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனே அரசின் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Tags : Inhabitants ,lowland areas ,
× RELATED பொன்னை ஆற்றில் மூன்றாவது முறையாக...