×

50% மானியத்தில் உளுந்து விதை, உயிர் உரங்கள்

பாபநாசம், நவ. 25: பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை அடுத்த மேலகொருக்கப்பட்டில் மானாவாரி மேம்பாட்டு திட்ட விவசாயிகள் பயிற்சி நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா பங்கேற்று பேசும்போது, மானாவாரி மேம்பாட்டு திட்டடத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.500 மானியமாக வழங்கப்படும். ரூ.2,500 மதிப்புள்ள உளுந்து விதை, உயிர் உரங்கள், டி விரிடி ஆகியவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இவைதவிர மானாவாரி தொகுப்பு விவசாயிகள் தங்களுக்குள் குறைந்த வாடகைக்கு விட்டு பயன்படுத்தும் வகையில் இயந்திர வாடகை மையம் ரூ.8 லட்சம் மதிப்பில் அமைத்து தரப்படும் என்றார். வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் பங்கேற்று பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான பண்ணை கருவிகள் மானிய திட்டம், பண்ணை குட்டைகள் அமைத்தல், சோலார் பம்ப்செட்டுகள் அமைத்தல் ஆகியவை குறித்து விளக்கினார். இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

இதேபோல் அம்மாப்பேட்டையில் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பயிற்சி வகுப்பு நடந்தது. வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் பங்கேற்று மானியத்தில் கருவிகள் பெறும் விபரம், இயந்திர வாடகை விபரங்கள், சோலார் பம்ப் செட் மானிய விபரங்கள், நபார்டு பண்ணை குட்டை ஆகியவற்றில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரில் உள்ள நில ஆவணங்கள், ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகத்துடன் அணுகலாம் என்றார்.
வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா பேசும்போது, சம்பா, தாளடி நெற்பயிரில் ஆங்காங்கே குருத்துப்பூச்சி, ஆனைக்கொம்பன் தாக்குதல் காணப்படுகிறது. இதற்கு விவசாயிகள் ஒவ்வொருவரும் அவசியம் விளக்குப்பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். டி வடிவ குச்சிகளை வயலில் ஆங்காங்கே வைத்தால் எலி, பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்றார்.

விவசாயிகளுக்கு அழைப்பு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு பேரிடர் பாதிப்புகளை தெரிவிக்க 1077
தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் கூறும்போது, கனமழை மற்றும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அரசின் எச்சரிக்கைகளை அறிந்து கொள்வதற்கு டிஎன் ஸ்மார்ட் என்ற செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பேரிடர்கள் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்களை கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலங்களில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 மற்றும் 9345336838 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் 80 பேர் தஞ்சைக்கு வருகை
நிவர் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு சென்று அங்குள்ளவர்களை மீட்க ஏதுவாக சென்னையில் இருந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 80 பேர் தஞ்சை ஆயுதப்படை மைதானத்துக்கு வருகை தந்தனர். அவர்களோடு தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையினர் 114 பேரும், உள்ளூர் போலீசார் 50 பேரும் என 8 குழுவாக பிரிக்கப்பட்டனர். இவர்கள் வல்லம், திருவையாறு, தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய காவல் உட்கோட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களோடு மண்வெட்டி, கடப்பாரை, கயிறு, ரப்பர் படகுகள், காஸ் லைட்டுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஸ்டெச்சர்கள், அரிவாள் அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களை எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய் அனுப்பி வைத்தார்.

அப்போது எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய் கூறியதாவது: நிவர் புயலால் எந்த ஒரு உயிரிழப்பும், உடமைகள் இழப்பும் ஏற்படக்கூடாது, போலீசார் பொதுமக்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் உதவிகளை தேவைப்படும் பட்சத்தில் வீடியோ, புகைப்படமாக எடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். உங்களது பணிகளை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தவாறு உயர் போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து வருவர்.
தாங்கள் பணியாற்றக்கூடிய பகுதிக்கு சென்றதும் அங்கு கடந்த காலங்களில் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதியை உடனடியாக சென்று பார்வையிட வேண்டும். மேலும் நிவாரண முகாம்களையும் பார்வையிட்டு அதற்கேற்றார்போல் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

பொதுமக்கள் பயப்பட தேவையில்லை
தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நிவர் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் என்ற முறையில் ஆய்வு செய்தபோது அனைத்து முன்னேற்பாடு பணிகளும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக பாதிப்புக்கு உள்ளாகும் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் தேவையான முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட அளவில் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இதேபோல் தேவையான மீட்பு பொருட்களுடன் தமிழக பேரிடர் குழுவினர் மாவட்டம் முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள், விவசாயிகள் எதற்காகவும் பயப்பட தேவையில்லை. மழை, புயலால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட 251 நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படும் தகவல்களை மட்டும் அறிந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும் தகவல், புகார், உதவி வேண்டுவோர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டை அறை தொலைபேசி எண்.1077 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார். கலெக்டர் கோவிந்தராவ் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்...