×

நிவர் புயலால் காப்பீடு இன்றுடன் நிறைவு என அறிவிப்பு

தஞ்சை, நவ. 25: தஞ்சை மாவட்டத்தில் நிவர் புயலால் சம்பா, தாளடி பயிர் காப்பீடு இன்றுடன் நிறைவடைவதாக வேளாண்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் பயிர் காப்பீடு பிரிமீயத்தை பெற மறுப்பதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா, தாளடி நெற்பயிர் 1,24,524 ஹெக்டேரில் நடவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் டோக்கியோ காப்பீட்டு நிறுவனம் மூலம் பயிர் காப்பீடு பெறப்பட்டு வருகிறது. நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.489 வீதம் பிரீமியம் தொகையை விவசாயிகள் செலுத்தி பதிவு செய்து வருகின்றனர். இந்த பிரீமியம் செலுத்த வரும் டிசம்பர் 15ம் தேதி இறுதிநாளாக கலெக்டர் கோவிந்தராவ் அறிவித்திருந்தார். இதையடுத்து விவசாயிகளும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், இ-சேவை மையங்கள், பொதுத்துறை வங்கிகள் மூலம் காப்பீடு பிரீமியத்தை செலுத்தி வந்தனர்.

இதற்கிடையில் நிவர் புயலால் பயிர்கள் பாதித்தால், அதன்பிறகு காப்பீடு தொகை செலுத்த முடியாது என வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகள் மத்தியில் வாய்மொழி தகவலாக தெரிவித்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருந்து பிரீமியத்தை செலுத்தி வருகின்றனர். ஆனால் புயல் முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக பல இடங்களில் அவ்வபோது மின்சாரம் நிறுத்தம், கணினியில் சர்வர் குளறுபடி, கிராம நிர்வாக அலுவலர்களிடம் கணினி சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ் பெறுவதில் தாமதம் என விவசாயிகள் அலைகழிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் தமிழக அரசு, மாநிலம் முழுவதும் இன்று பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் துறைகளில் எவ்வாறு காப்பீடு பிரீமியம் செலுத்த முடியும். எனவே பிரீமியம் செலுத்தும் காலக்கெடுவை ஏற்கனவே அறிவித்தவாறு டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுந்தரவிமலநாதன் கூறியதாவது: பயிர் காப்பீடு செலுத்த டிசம்பர் 15ம் தேதி கடைசி நாள் என அறிவித்ததால் விவசாயிகள் பிரீமீயத்தை செலுத்தாமல் இருந்தனர். தற்போது புயல் காரணமாக இன்று (25ம் தேதி) கடைசி என கூறுகின்றனர். பல இடங்களில் இ-சேவை மையங்களில் சர்வர் குளறுபடி உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளில் பயிர் கடன் பெற்ற விவசாயிகளிடமிருந்து மட்டுமே காப்பீடு பிரிமீயம் பெறப்படுகிறது. இதனால் பிற விவசாயிகள் காப்பீடு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என்றார்.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜெஸ்டின் கூறியதாவது: காப்பீடு பிரீமியம் செலுத்த டிசம்பர் 15ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. தற்போது நிவர் புயலால் பயிர் சேதமானால், பின்னர் அந்த பயிர்களுக்கு காப்பீடு செலுத்த முடியாது. எனவே விவசாயிகளை இன்று (25ம் தேதி) க்குள் பிரீமியத்தை செலுத்த கூறியுள்ளோம். பல இடங்களில் மின்தடை, சர்வர் பிரச்னை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 50 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பரப்பளவுக்கும் காப்பீடு பிரீமியத்தை விவசாயிகள் செய்ய வேண்டும் என்றார்.

Tags : Announcement ,
× RELATED குடியரசு தின சிறப்பு சலுகை: ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவிப்பு