×

நாகை மாவட்டத்தில் 11 விசைப்படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை 24 மணி நேரம் பணியில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

நாகை,நவ.25: நாகை மாவட்டத்தில் இருந்து 11 விசைப்படகில் சென்ற 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரம் பணியில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் கூறினார். நிவர் புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் எடுத்துள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன், கலெக்டர் பிரவீன்பிநாயர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதன்படி நேற்று வேளாங்கண்ணி செபஸ்தியார் நகர், வேளாங்கண்ணி பஸ்ஸ்டாண்ட், பூக்காரத்தெரு, சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அப்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து வேளாங்கண்ணியில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்து தேவையான அனைத்து பொருட்களையும் கையிருப்பு வைத்திருக்க உத்தரவிட்டனர்.

இதன்பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் கூறியதாவது: நாகை மாவட்டத்தில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புயல் பாதுகாப்பு மையங்கள், பல் நோக்கு மையங்கள் என 99 பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் விடுமுறை எடுக்காமல் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு முககவசம், சானிடைசர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் போதுமான அளவிற்கு பொருட்கள் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முகாம்களுக்கு செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 11 விசைப்படகில் சென்ற 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்ப வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags : Fishermen ,sea ,trawlers ,district ,Naga ,shore ,
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்