×

தோகைமலையில் குளித்தலை- மணப்பாறை மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற நிலம் அளவிடும் பணி துவக்கம்

தோகைமலை, நவ. 25: தோகைமலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நிலம் அளவீடு செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலையில் உள்ள குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் அதிகமாக உள்ளன. இந்த இடங்களின் அருகில் உள்ள கட்டிட உரிமையாளர்கள் சிலர் ஆக்கிரமிப்புகள் செய்து கொட்டகைகள் அமைத்து உள்ளனர். இதோடு போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் அமைத்து அதில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் வாடகையாக வசூல் செய்வதாகவும் நெடுஞ்சாலைத்துறைக்கு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல் மேற்பார்வையில் வருவாய்துறை உதவியோடு குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டின் இருபுறங்களிலும் நிலம் அளவீடு செய்து வருகின்றனர். இதில் நெடுஞ்சாலை துறை சார்பில் நட்டு இருந்த கற்கள் மாயமாகி இருப்பதால் அதற்கு பதிலாக எல்லை பகுதியில் பெயின்ட் அடித்து வருகின்றனர். மேலும் நில அளவீடுகள் முடிந்து ஆக்கிரமிப்பு செய்து உள்ள கடைகளுக்கு ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள முறைப்படி நோட்டீஸ் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர். இதில் நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் பூபாலசிங்கம், சாலை ஆய்வாளர் குழந்தைதெரசா, நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் செல்வராஜ், பெருமாள், வெள்ளைச்சாமி, ராமகிருஷ்ணன், ராஜேந்திரன் மற்றும் வருவாய்துறை உதவியாளர் பாக்கியராஜ் ஆகியோர் நிலம் அளவீடு செய்து வருகின்றனர்.

Tags : Kulithalai-Manapparai Main Road ,
× RELATED கழிவுநீர் வாறுகாலில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கிராம மக்கள் மனு