×

போடி 10வது வார்டு ரேஷன் கடையில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் பொதுமக்கள் அதிருப்தி

போடி, நவ. 25: போடி 10வது வார்டில் உள்ள ரேஷன் கடையில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் செய்வதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், கூலித்தொழிலாளர்கள் தங்களது வேலையை கெடுத்து பொருட்கள் வாங்க வேண்டிய அவலம் உள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கடந்த சில மாதங்களுக்கு முன் பயோமெட்ரிக் முறையை அரசு அமல்படுத்தியது. இதில், பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு கைரேகை பதிவாகாமல் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். இம்முறைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பழைய முறையிலேயே பொருட்கள் வழங்க கோரிக்கை விடுத்தனர். இதையேற்று பழைய முறையிலேயே ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், போடியில் 10வது வார்டில் உள்ள 4ம் எண் ரேஷன் கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை விநியோகம் செய்யப்படுகிறது. இக்கடையில், இன்னும் பயோமெட்ரிக் முறையிலேயே பொருட்களை வழங்குகின்றனர். இதனால், பலரது கைரேகை விழாமல் பொருட்கள் விநியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. எனவே, பழைய முறையிலேயே பொருட்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து போடி வட்ட வழங்கல் அதிகாரியிடம் கேட்டபோது, ‘10வது வார்டு ரேஷன் கடையில் சில நாட்களில் ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றிவிடுவோம்’ என்றார்.

Tags : Bodi 10th Ward Ration Store ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ