×

நிதி வழங்க கோரி பஞ்சாயத்து தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

சாயல்குடி. நவ.25:  ராமநாதபுரம் மாவட்டத்தில் பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டிய பொதுநிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாயத்து தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வெங்கலகுறிச்சி செந்தில்குமார் தலைமை வகித்தார். கூட்டமைப்பு தலைவர் சித்ராமருது, பொருளாளர் கீழச்செல்வனூர் இக்பால் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் கோகிலா ராஜேந்திரன் வரவேற்றார்.

10 மாதங்களுக்கு மேலாக பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டிய பொதுநிதி, மானிய குழு நிதிகள், சிறப்பு நிதிகள் இன்றி கிராமங்களில் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே மத்திய,மாநில அரசுகள் வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்ட பணிகளை அனைத்தையும் பஞ்சாயத்து தலைவர்கள் மூலம் மட்டுமே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி பஞ்சாயத்து தலைவர்களுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். தலைவர்களுக்கு மாத சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Tags : Panchayat leaders ,
× RELATED கூடுதல் நிதி வழங்க கோரி ஊராட்சி தலைவர்கள் கலெக்டரிடம் மனு