நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை கலெக்டர் அறிக்கையளிக்க உத்தரவு

மதுரை, நவ. 25: நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான நடவடிக்கை குறித்து கலெக்டர் தரப்பில் அறிக்கையளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த அருண்நிதி, சமூகஆர்வலர் கே.கே.ரமேஷ் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்திருந்த மனுக்களில் கூறியிருப்பதாவது, மதுரை மாவட்டத்தில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. நீர்நிலைகளும், நீர்வழி தடங்களும் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்பாலும், தண்ணீரை தேக்க முடியாததாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே போகிறது. வண்டியூர் கண்மாய் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள், நீர்வழி தடங்களிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், தூர்வாரி தண்ணீரை தேக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து கால்வாய் உள்ளிட்டவற்றை சரிசெய்வது, இதற்காக ஜேசிபி இயந்திரம் வாங்குவது உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கலெக்டர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: