×

தமிழகத்திலே முதல்முறையாக திருநங்கைக்கு குடும்ப சொத்தில் பங்கு தர உத்தரவு உசிலம்பட்டி ஆர்டிஓ அதிரடி

உசிலம்பட்டி, நவ. 25: உசிலம்பட்டி அருேக தமிழகத்திலே முதல்முறையாக திருநங்கைக்கு குடும்ப சொத்தில் பங்கு தர ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அய்யனார்குளத்தை சேர்ந்த காந்தி மகன்கள் அன்புராஜன், அய்யாத்துரை, ரவீந்திரன். இவர்களது தாய் ராஜாத்தி பெயரில் போடுவார்பட்டி கிராமத்தில் சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் அன்புராஜன் கடந்த 2012ம் ஆண்டு சென்னை கீழ்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவமனையில் திருநங்கை என சான்றிதழ் பெற்று ஊர்வசி என பெயர் மாற்றம் செய்து திருநங்கையாக மாறி விட்டார். மேலும் மதுரை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரிய உறுப்பினராகவும் உள்ளார். இவர் தற்போது மதுரை அரசடி ராமலிங்கநகர் முதல் தெருவில் வசித்து வருகிறார்.

இவரது தாய் ராஜாத்தி பெயரிலுள்ள சொத்து அன்புராஜன் என கூட்டுப்பட்டாவில் தாக்கலாகி உள்ளது. இப்பெயரை காரணம் காட்டி திருநங்கையான ஊர்வசிக்கு சொத்தை பிரித்து தர இவரது சகோதரர்கள் அய்யாத்துரை, ரவீந்திரன் மறுத்து விட்டனர். இதுதொடர்பாக உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் ஊர்வசி புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை செய்த ஆர்டிஓ ராஜ்குமார் கூட்டுப்பட்டாவில் அன்புராஜன் (எ) ஊர்வசி என திருத்தம் செய்யப்பட்டு சொத்தில் 3ல் ஒருபங்கு வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் திருநங்கை என பாலினத்தை காரணம் காட்டி சொத்தை தர மறுப்பது சட்டப்படி குற்றம், எனவே உத்தரவுப்படி செய்யாவிட்டால் சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ தெரிவித்தார். தமிழகத்திலே திருநங்கைக்கு குடும்ப சொத்தில் பங்கு பிரித்து கொடுத்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...