×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் நிரப்ப மண் பதப்படுத்தும் பணி மும்முரம்

ஊட்டி,நவ.25: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள தொட்டிகளில் மண் நிரப்புவதற்காக புதிய மண் கொண்டு வரப்பட்டு, பதப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கோடை காலத்தின் போது ஊட்டியில் முதல் சீசன் அனுசரிக்கப்படுகிறது. இச்சமயத்தில் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. மலர் கண்காட்சியின் போது, தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு பலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதிலும் மலர்கள் பூத்துக் குலுங்கும்.

இந்த தொட்டிகளைக் கொண்டு மாடங்கள் மற்றும் புல் தரைகளில் பல்வேறு அலங்காரம் மேற்கொள்ளப்படும். இம்முறை கொரோனா பாதிப்பு காரணமாக மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. இதனால், வரும் 2021 மே மாதம் சிறப்பாக மலர் கண்காட்சி நடத்த தோட்டக்கலைத்துறை மும்முரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பூங்காவில் நாற்று உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 லட்சம் மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் தொட்டிகளில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக, தொட்டிகளில் மண் நிரப்புவற்காக சோலை மண் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மண் தரம் பிரிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் தொட்டிகளில் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக, மண்ணில் இயற்கை உரம் கலந்து அதனை தரம் உயர்த்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அடுத்த வாரம் முதல் தொட்டிகளில் மண் நிரப்பப்பட்டு நாற்று நடவு பணிகள் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Ooty Botanical Garden ,
× RELATED பொங்கலுக்கு ஒருவாரமே உள்ள நிலையில்...