×

10,627 பெண்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சை

ஈரோடு, நவ. 25: 10,627 பெண்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சை செய்து, மாநில அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, மாவட்ட குடும்ப நலச் செயலகம் சார்பில், ஆண் கருத்தடை சிகிச்சை இருவார விழா-2020 என்ற பெயரில் விழிப்புணர்வு வாகனம் துவங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஈரோடு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி, விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (நலப்பணிகள்) டாக்டர்.கோமதி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சவுண்டம்மாள், துணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள், குடும்ப நலம்) டாக்டர்.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ஈரோடு கலெக்டர் கதிரவன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில், ஆண்களுக்கான நிரந்தர நவீன கருத்தடை சிகிச்சை விளம்பரம் இரு வார விழாவாக நடக்கிறது. இதில் ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை இலவச சிறப்பு சிகிச்சை முகாம்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வரும் 28ம் தேதி முதல் டிச.8ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சைக்கு 186 பேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 118 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மாநிலத்தில் 2வது இடம் பெற்றது.

மேலும் பெண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை 10,627 பேருக்கு செய்து மாநிலத்தில் ஈரோடு மாவட்டம் முதல் இடத்தினை பிடித்தது. இந்த ஆண்டு ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை சிகிச்சை இலக்காக 186 முழுமையாக எய்திட திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையானது 100 சதவீதம் பாதுகாப்பானது. கடின உழைப்பிற்கு தடையில்லாதது. மேலும் ஊக்கத்தொகையாக ரூ.1,100 உடனடியாக வழங்கப்படும். எனவே, திருமணமான ஆண்கள் குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இதுகுறித்த விவரங்களுக்கு 9443546455, 94428 36562, 97903 06610, 90958 18118 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Tags : women ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது