×

மஞ்சள் விலை வீழ்ச்சியை தடுக்க இ-டெண்டர் முறை

ஈரோடு,நவ.25: மஞ்சள் விலை வீழ்ச்சியை தடுக்க இ-டெண்டர் முறையை அமல்படுத்தி  ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம் நேற்று  காணொலி காட்சி மூலம் நடந்தது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை  தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் பேசியதாவது: கீழ்பவானி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பவானி ஆற்றில் ராட்சத  மின்மோட்டார்களை வைத்து சிலர் தண்ணீர் திருடி வருகின்றனர். இதனால் பாசன  விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பர்கூர் மலைவாழ் மக்கள் வங்கி  சேவைக்காக அந்தியூர் வர வேண்டி உள்ளது. இதனால், பல்வேறு இன்னல்களுக்கு  ஆளாகி வருவதால், பர்கூர் மலையிலேயே புதியதாக வங்கி கிளை ஒன்றை தொடங்க  வேண்டும். மலைப்பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தியூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில்  குப்பைகள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வந்த பேட்டரி வாகனங்கள்  பழுதடைந்து கிடப்பதால், துப்புரவு பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு  வருகின்றனர்.

  அந்தியூர் பெரியஏரி, சந்தியாபாளையம் ஏரி,  கெட்டிசமுத்திரம் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் தற்போதுள்ள பாசன சபைகளை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தி புதிய  நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். மரவள்ளி விலை வீழ்ச்சியை தடுக்க மாவட்ட நிர்வாகம்  முத்தரப்பு கூட்டத்தை கூட்டி விலையை நிர்ணயிக்க வேண்டும். கால்நடைகளுக்கு  அம்மை நோய் பாதிப்பு இருப்பதால், உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.  மொடக்குறிச்சியில் பத்திரப்பதிவு அலுவலகத்தை புதியதாக அமைக்க வேண்டும்.  ஆவினில் பால் உற்பத்தியாளர்களுக்கான நிலுவைத்தொகையை விரைந்து வழங்க வேண்டும். காலிங்கராயன் வாய்க்காலில் நபார்டு நிதியின் கீழ்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள  ஷட்டர்களுக்கு பதிலாக நவீன ஷட்டர்களை அமைக்க வேண்டும்.

மஞ்சள் விலை  தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் மஞ்சள் உற்பத்தி விவசாயிகள்  பாதிப்படைந்து வருகின்றனர். எனவே விலை வீழ்ச்சியை தடுக்கவும், உரிய விலை  கிடைக்கவும் இ-டெண்டர் முறையை அமல்படுத்த வேண்டும். மேலும் ஏற்றுமதிக்கான  வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பை  டிசம்பர் இறுதிவரை நீட்டிக்க வேண்டும் என்பதோடு அடுத்த போகத்திற்கான  தண்ணீர் திறப்பை முன்கூட்டியே அறிவித்தால், முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள  வசதியாக இருக்கும். அடுத்த மாதம் 2வது வாரத்தில் நெல் அறுவடை தொடங்க  உள்ளதால், நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள்  பேசினர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை