×

புதுவையில் இன்று அரசு விடுமுறை

புதுச்சேரி, நவ. 25: நிவர் புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் புதுவையில் இன்று (25ம் தேதி) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:புதுவையில் நிவர் புயலை முன்னிட்டு தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளோம். உணவு, தடையில்லா மின்சாரம், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம். கரையை கடக்கும்போது 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். இதனை மீறி வீட்டை விட்டு வெளியே நடமாடுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். புயலை வேடிக்கை பார்க்க கடற்கரைக்கு யாரும் வரக்கூடாது.மரம், மின்கம்பங்கள் சாய்வதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே விளம்பர பதாகைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளோம். புயல் குறித்து அச்சம் தேவையில்லை.
அதேநேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புதுவையில் இன்று (25ம் தேதி) அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 90 பேர் புதுவைக்கு வந்துள்ளனர். பேரிடர் பயிற்சி பெற்ற ஐஆர்பிஎன், தீயணைப்புத்துறை வீரர்களும் களத்தில் இருப்பார்கள்.

புதுவையில் 196 நிவாரண முகாம்களும், காரைக்காலில் 50 முகாம்களும் அமைத்துள்ளோம். இங்கு தங்க வைக்கப்படு பவர்களுக்கு உணவு வழங்கப்படும். தேவையான மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. புயலை எதிர்கொள்ள அரசின் அனைத்து துறைகளும் தயார்நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரம் அமைச்சர் ஷாஜகான் மேலும் கூறுகையில், கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். புதுவையிலிருந்து சென்றவர்கள் அனைவரும் திரும்பிவிட்டனர். காரைக்காலில் 83 படகுகளில் மீன்பிடிக்க சென்றவர்களில் 10 பேர் திரும்பியுள்ளனர். 48 பேர் கோடியக்கரையிலும், 5 பேர் ஆந்திராவிலும் பாதுகாப்பாக உள்ளனர். மீதமுள்ள 30 பேரை பற்றி தகவல் இல்லை. கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்து அவர்களை பாதுகாப்பாக அழைத்துவர ஏற்பாடு செய்துள்ளோம். புயல் கரையை கடக்கும் முன் அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்படுவர்.

Tags : government holiday ,
× RELATED 3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து...