×

நிவர் புயலையொட்டி புதுவையில் நாளை முழுஅடைப்பு போராட்டம் ரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

புதுச்சேரி, நவ. 25: புதுச்சேரி ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், சிஐடியு செயலாளர் சீனுவாசன், ஐஎன்டியுசி பொதுச்செயலாளர் ஞானசேகரன், ஏஐசிசிடியு பொதுச்செயலாளர் புருசோத்தமன், எல்எல்எப் செயலாளர் செந்தில், எம்எல்எப் செயலாளர் வேணுகோபால், ஏஐயுடியுசி செயலாளர் சிவகுமார், அரசு ஊழியர் சம்மேளன தலைவர் பிரேமதாசன், ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் மணிவண்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா நிவாரணம் மாதம் ஒன்றுக்கு ரூ.7500 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்க அமைப்புகளின் சார்பில் நாளை (26ம் தேதி)  மாநிலம் தழுவிய பொது வேலைநிறுத்தம், முழு அடைப்பு போராட்டம் மற்றும் 10 மையங்களில் மறியல் போராட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டு இருந்தது. தற்சமயம் நிவர் புயல் புதுச்சேரி அருகில் மையம் கொண்டுள்ளதாலும்,  கரையை கடக்கும்போது பெரும் சேதத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதால் முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் ரத்து செய்யப்படுகிறது. அனைத்து தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புயலை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளித்திட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். தற்போது,புதுச்சேரி மாவட்ட நீதிபதி 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இது அவசர உதவிக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடும் என்பதால் அதனை ரத்து செய்திட வேண்டும், போதுமான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : cancellation ,Trade unions ,strike ,storm ,Nivar ,
× RELATED மின்வாரிய பதவிகளை ஒழிப்பது நியாயமல்ல: தொழிற்சங்கத்தினர் கடிதம்