×

கடலூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க நடவடிக்கை

கடலூர்,  நவ. 25: கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து தொழில்துறை அமைச்சர் சம்பத், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கடலூர் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகும் என மொத்தம் 278 பகுதிகள் கண்டறிய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 191 தற்காலிக தங்குமிடங்களும், தயார் நிலையில் உள்ளன.  மேலும் மாவட்டத்தில் முதல் தகவல் அளிப்பவர்கள், 56கால்நடை பாதுகாப்பு மையம், பாம்பு பிடிப்பவர்கள், நீச்சல் வீரர்கள், ஆம்புலன்ஸ் சேவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்கு  உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும். நிவாரண முகாம்களில் குடிநீர், சுத்தமான கழிவறை, ஜெனரேட்டர் மூலம் மின்வசதி, பொதுமக்களுக்கு உணவு தயாரிக்க போதுமான அளவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், தேவையான எரிவாயு அடுப்புகள், சிலிண்டர்கள், உணவு தயாரிக்க சமையலர்கள் போன்ற வசதிகள் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 60,000 பேர் வரை தற்பொழுது முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக முகாம்களில் சென்று தங்கி கொள்ளலாம்.

 நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் ஏற்படும் நீர் தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்ற, பம்பு செட்டுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்  கடலூர், சிதம்பரம் என இரண்டு பிரிவுகளாக,  கடலூரில் 3 குழுக்களும், சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதியில் 3 குழுக்களும் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.  விவசாயிகள் அனைவரும் தங்களுடைய பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வடக்குமண்டல காவல்துறை தலைவர் நாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், கடலூர் ஒன்றியக்குழுத்தலைவர்  தெய்வபக்கிரி, சார் ஆட்சியர்கள் பிரவின்குமார், மதுபாலன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : camps ,Cuddalore district ,
× RELATED கடும் வறட்சி எதிரொலி: டாப்சிலிப்...