×

நாளை நடைபெறுகின்ற பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்பு

நாகர்கோவில், நவ.25: நவம்பர் 26ம் தேதி நடைபெறுகின்ற அகில இந்திய பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தி ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். எப்.சி, இன்சூரன்ஸ் கட்டணங்களை குறைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு படி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு லைசென்சு மட்டும் இருந்தால் போதும் என்ற உத்தரவை மீறி பேட்ஜ் இல்லையென அபராதம் விதிக்க கூடாது. ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும்,தொழிலாளர்கள் நலன்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும் திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (26ம் தேதி) அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

இந்தநிலையில் இந்த பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் ஆட்டோ தொழிற்சங்கத்தினரும் பங்கேற்கின்றனர். ஆட்டோ தொமுச மாவட்ட தலைவர் உதயகுமார், ஜலீல், சுடலைக்கண், எச்.எம்.எஸ் சங்கத்தை சேர்ந்த பால்ராஜ், சிவலிங்கம், விஜயகுமார், உள்ளிட்டோர் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.  மனுவில், ‘மத்திய மாநில அரசுகள் கடைபிடித்து வரும் தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிட வலியுறுத்தியும், ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் 26ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் குமரி மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் எங்களது கோரிக்கைகளை பரிசீலிக்க 3 மாதங்களுக்கு ஒருமுறை குறைதீர் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் கூட்ட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Auto workers ,strike ,
× RELATED நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்