×

துப்பாக்கி சூட்டில் பலியான தொழிலாளி மகனுக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்

தூத்துக்குடி, நவ.25: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தொழிலாளி மகனுக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.  தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே 22, 23ம் தேதிகளில் நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு, தடியடியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரூபாயும் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் வீதம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே உத்தரவிட்டார். இதனிடையே இச்சம்பவத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

 அதன்படி அதே ஆண்டு செப். 27ம் தேதி ஏற்கனவே 18 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளியான அந்தோனி செல்வராஜின் மகன் செல்வன் அஜய் ஜோன்ஸ், அரசு வேலை பெறுவதற்குரிய 18 வயதை  தற்போது எட்டியதை அடுத்து அவருக்கு  தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளராக பணியாற்றுவதற்கான நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் வழங்கினார். அப்போது தலைமைச் செயலாளர் சண்முகம்,  அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி  கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் அரசு  உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,shooting ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...