×

புதுச்சேரி, கடலூர் பஸ் போக்குவரத்து ரத்து சென்னை வழித்தடத்தில் மாற்றம் நிவர் புயல் எச்சரிக்கையால் திருவண்ணாமலையில் இருந்து

திருவண்ணாமலை, நவ.25: நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக, திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி மற்றும் கடலூர் செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயலால், கடலோர மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதோடு, 120 கிமீ வேகத்தில் காற்று வீசும், கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதனால், சாலையோர மரங்கள், மின்கம்பங்கள் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அதையொட்டி, போக்குவரத்தை இயக்குவதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி, கடலூர் செல்லும் அனைத்து பஸ்களும் நேற்று மதியம் 2 மணியில் இருந்து நிறுத்தப்பட்டது. அதேபோல், விழுப்புரம் செல்லும் பஸ்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக சென்னை செல்லும் அனைத்து பஸ்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலையில் இருந்து வந்தவாசி, செய்யாறு, காஞ்சிபுரம் வழியாக சென்னைக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதோடு, திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் பஸ்களின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளனர். இன்று காற்றும் கனமழையும் அதிகரித்தால், பஸ் போக்குவரத்தில் மேலும் பல மாற்றங்களை செய்ய அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


Tags : Puducherry ,Cuddalore ,bus service ,route ,Chennai ,Thiruvannamalai ,
× RELATED துடியலூரில் இருந்து காந்திபுரத்துக்கு டவுன் பஸ் மீண்டும் இயக்கம்