வேலூர், நவ.25: வேலூரில் ஆசி கேட்டு வந்ததாக கூறி, 4 பேர் கும்பல் பாதிரியாரை தாக்கி, கட்டிப்போட்டு ₹9 லட்சம் ரொக்கம் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் செயல்படும் ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் சர்ச்சின் பாதிரியார் மலையப்பன்(60). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், சர்ச்சில் உள்ள அவரது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது அறையின் ஜன்னல் கதவை 4 பேர் கொண்ட கும்பல் தட்டியுள்ளது. இதனால் ஜன்னலை திறந்த பாதிரியாரிடம், ‘நாங்கள் புதிய கார் வாங்கியிருக்கிறோம். அதற்கு ஆசி வழங்க வேண்டும்’ என்று கூறி அவரை அழைத்துள்ளனர். இதை நம்பிய பாதிரியார் கதவை திறந்தார். அப்போது திடீரென கத்தியை காட்டி மிரட்டிய கும்பல், அவரது நெற்றிப்பொட்டில் பலமாக தாக்கியது. மேலும் அவரை அறைக்குள் தள்ளிச் சென்று அங்குள்ள நாற்காலியில் கட்டிப்போட்டனர்.