×

நிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை விவகாரம்: போலீஸ் விசாரணைக்கு பயந்து உறவினர் திடீர் தற்கொலை

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டையில் நிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், போலீஸ் விசாரணைக்கு பயந்து உறவினர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சவுகார்பேட்டையை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் தலில் சந்த் (74), இவரது மனைவி புஷ்பா பாய் (70). இவர்களது மகன் சீத்தல் (40) ஆகியோர் கடந்த 11ம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். போலீசார் விசாரணையில், ₹30 கோடி சொத்துகளை அபகரிக்க சீத்தலின் மனைவி ஜெயமாலா இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியது தெரிந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஜெயமாலா, அவரது சகோதரர்கள் கைலாஷ், வழக்கறிஞர் விலாஷ் உட்பட 6 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மேலும், கொலையாளி கைலாஷ்க்கு துப்பாக்கி கொடுத்தது தொடர்பாக ஜெய்ப்பூரை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி ராஜீவ் துபேவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ஜெயமாலா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் சி.பி.ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தலில் சந்த்தின் உறவினர் விஜயகுமார் (45), தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிவித்து இருந்தார்.
இதனால், அவரை தொடர்புகொண்ட யானைகவுனி போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.

இதனால், பயந்துபோன விஜயகுமார் நேற்று தனது அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீசார், விஜயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, 3 பேர் கொலை சம்பவத்தில் இவருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : institution ,president ,police investigation ,suicide ,
× RELATED அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில்...