×

சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி திட்டத்தில் 9 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஒப்புதல்: 984 பேருக்கு மட்டுமே பணம் வழங்கப்பட்டுள்ளது

சென்னை: சாலையோர வியாபாரிகளுக்கான ரூ.10 ஆயிரம் கடன் வழங்கும் திட்டத்தில், சென்னையில் சமர்ப்பிக்கப்பட்ட 9,157 விண்ணப்பங்களில் 2,387 பேருக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 984 பேருக்கு மட்டுமே தொகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். இவர்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் பதிவு செய்த 23 ஆயிரத்து 135 நடைபாதை வியாபாரிகளுக்கு ₹1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக சென்னை மாநகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகள் அனைவரும் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் தற்போது வரை 14 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் யாரும் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.

இதனை தொடர்ந்து சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ‘ஸ்வநிதி’ திட்டத்தில் ரூ.10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த கடனை மாதத் தவணையாக, ஓராண்டிற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். முறையாக கடனை திருப்பி செலுத்தினால் ஏழு சதவீத வட்டி மானியம் கிடைக்கும், எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் கடன் பெற சாலையோர வியாபாரிகள் pmsvanidhi.mohua.gov.in  என்ற இணையதளத்தில் மொபைல் எண்ணை அளித்து தகவல்களை பதிவு செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னையில் உள்ள சாலையோர வியாபாரிகள் கடன் பெற ஏதுவாக சென்னை மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகள் வசிக்கும் இடங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. அப்போது வியாபாரிகளின் விண்ணப்பங்களுடன், வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தற்போது வரை 9,157 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 2,387 பேருக்கு மட்டுமே கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில், 984 பேருக்கு மட்டுமே கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.2.38 கோடி கடன் தொகை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.96 லட்சம் மட்டுமே வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க விண்ணப்பம் அளிப்பது தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஜனவரி மாதத்திற்குள் அனைத்து வியாபாரிகளும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் சராசரியாக 30 நாட்களில் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. சென்னையில் விண்ணப்பித்தவர்களில் 59% பேர் ஆண்கள், 41% சதவீதம் பேர் பெண்கள். வங்கிகள் கடன் தொகை வழங்குவது தொடர்பாக அரசு சார்பில் தொடர்ந்து பல அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : roadside vendors ,
× RELATED 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக...