×

நிவர் புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் (பொறுப்பு) க.பிரியா தலைமையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுக்கான அவசர அலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட இயக்குநர் செல்வக்குமார் உட்பட அனைத்து  துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிவர் புயல் நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் - கல்பாக்கம் இடையே கரையை கடக்கும் என்பதால், மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்படும் இடங்களில் பொதுமக்கள் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக  மீட்பது, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் செயல்படும் விதம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், கலெக்டர் பிரியா (பொறுப்பு), செய்தியாளர்களிடம் கூறியதாவது, நிவர் புயல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனால் கடற்கரையை ஒட்டிய கோவளம், கானத்துரில் இருந்து செய்யூர், கடப்பாக்கம், ஆலம்பரை குப்பம் வரை 22 மீனவ கிராமங்களை சேர்ந்த யாரும் கடலில்  மீன்பிடிக்க செல்லக்கூடாது. தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும். மாவட்டத்தின் மற்ற  பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 273 நிவாரண முகாம்களும், 24 மணிநேரமும் மீட்பு குழுவினர், காவல்துறை, தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்களுக்கு உதவும் வகையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தாசில்தார் தலைமையில் அனைத்து துறைகளை சேர்ந்த 15 அதிகாரிகள் 24 மணிநேரமும்  தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் 044-27427412, 044-27427414, 1077 ஆகிய அவசர எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Tags : meeting ,Collector ,
× RELATED மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை கலெக்டர் தலைமையில் நடத்த கோரிக்கை