×

மதுராந்தகம் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்கள்

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் ஏரி காத்தராமர் கோயில் அருகே நிறுத்தப்பட்டு இருந்த 2 கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் ஏரி காத்தராமர் கோயில் எனப்படும் கோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது. இதன் எதிரே திருக்குளமும் உள்ளது.இந்த குளக்கரையை ஓட்டிய போக்குவரத்து குறைவான பகுதிகளில் பலர் தங்களது கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவது வழக்கம். இதையொட்டி, கோயிலில் இருந்து சற்று தொலைவில் குளத்தின் அருகில் ஏராளமான கார்கள், பைக்குகள் நிறுத்தப்பட்டு இருந்தன. நேற்று மதியம், அங்கிருந்த ஒரு காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில், தீப்பற்றி எரிந்தது.

அந்த நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், அருகில் இருந்த சொகுசு காரில் தீப்பரவியது. 2 கார்களும் கொளுந்துவிட்டு எரிவதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மதுராந்தகம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்கிடையில், தீப்பற்றி எரிந்த வாகனங்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டு இருந்த 10க்கும் மேற்பட்ட கார்கள், பைக்குகளை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர். ஆனாலும், அதில் ஒரு பைக் முற்றிலுமாக எரிந்து நாசமானது. புகாரின்படி மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து சதிவேலையாக நடந்ததா அல்லது வேறு காரணமா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : Madurantakam ,area ,
× RELATED அனாதையாகும் சொகுசு கார்கள்!