×

ஆவடி காந்திநகரில் குப்பையை அகற்றக்கோரி மக்கள் நூதன போராட்டம்

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 34வது வார்டில் காந்திநகர் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் சமீபகாலமாக குப்பைகள் சரிவர அகற்றவில்லை. இங்குள்ள பல தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. தற்போது, அடிக்கடி பெய்து வரும் மழையால் குப்பைகள் தண்ணீரில் மக்கி கடும் துர்நாற்றம் வீசுகின்றன. இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்புக்குள் படையெடுக்கின்றன. இதனால் இப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் ஏற்படுகின்றன. மேற்கண்ட நகரில் உள்ள தெருக்களில் குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளனர். இருந்த போதிலும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கசில்லை.  

இந்நிலையில், நேற்று காலை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். பின்னர், அவர்கள் அதே பகுதி, விவேகானந்தா தெருவில் அகற்றப்படாமல் குவிந்து கிடந்த குப்பை மீது சேர் போட்டு உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டு கொண்டனர். அப்போது, அவர்கள், “குப்பைகளை இங்கிருந்து உடனடியாக அகற்றினால் தான் போராட்டத்தை கைவிடுவோம்” என திட்ட வட்டமாக கூறினார். இதனையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு துப்புரவு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் அங்கிருந்த குப்பைகளை உடனடியாக வாகனங்களில் அப்புறப்படுத்தினர். இதன் பிறகு, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : protest ,garbage removal ,Avadi Gandhinagar ,
× RELATED விசிக ஆர்பாட்டம் வேளாண் சட்டத்தை கண்டித்து