×

26, 27ம் தேதி விவசாயிகள் போராட்டத்திற்கு போலி பத்திரப்பதிவை கண்டித்து சகோதரர்கள் தர்ணா குழந்தைகளை மீட்க பேரணியாக வந்த முசிறி மக்கள்

திருச்சி, நவ.24: போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த தங்களது சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி சகோதரர்கள் தர்ணா செய்ததும், ஆற்றில் மூழ்கி மாயமான குழந்தைகளை மீட்க கோரி முசிறி மக்கள் பேரணியாக வந்ததும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திது. திருச்சி எழில்நகர் மக்கள் பாதுகாப்பு சங்கம் தலைவர் இந்திரன் அளித்த மனுவில், ‘திருவெறும்பூர் தாலுகா கிருஷ்ணசமுத்திரம் பஞ்சாயத்து எழில்நகர் ஆபீசர்ஸ் டவுன் 2009ம் ஆண்டு மனைப்பகுதியாக்க நிறைவேற்றப்பட்ட ஊராட்சிமன்ற தீர்மானத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மனைப்பகுதியான இப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைய உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே இதை மாற்ற வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

மணப்பாறை அருகே முத்திரம் கிராமம் கத்திரகான்பட்டியை சேர்ந்தவர் சின்னரங்கு. இவருக்கு குப்புடையார், குமாரசாமி, சின்னையா என்ற 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சின்னரங்கு இறந்துவிட்டார். இவருக்கு சொந்தமாக சமுத்திரம் கிராமத்தில் நிலம் உள்ளது. அவரது மூன்றாவது மகன் சின்னையா தனது மகன் சண்முகம் பெயருக்கு சின்னரங்கு பெயரில் உள்ள இந்த சொத்தை மணப்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார். அதற்கு ஆட்சேபனை தெரிவித்து சின்னரங்குவின் முதல் மகன் விவசாயி குப்புடையார் பத்திர பதிவு உயர் அதிகாரிகள் மற்றும் திருச்சி கலெக்டர் ஆகியோரிடம் புகார் தெரிவித்ததோடு பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி மனு அளித்திருந்தார்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்ததாகவும், தங்களது சொத்துக்களை மீட்டுதரக்கோரியும் குப்புடையார் மகன்கள் ராஜகோபால், சீனிவாசன் ஆகியோர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்க வந்தனர். மனுவை பெட்டியில் போட்டுவிட்டு, கலெக்டர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றபோது அவர்கள் தரையில் புரண்டு அழுதனர். நீண்ட போராட்டத்துக்கு பின் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

முசிறி மேலத்தெருவை சேர்ந்த ரகுராமன் மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக பேனர் ஏந்தியபடி வந்தனர். ரகுராமன் அளித்த மனுவில், ‘கடந்த 17ம் தேதி முசிறி பரிசல்துறை காவிரி ஆற்றில் ரத்தீஸ்குமார்(12), மிதுனேஷ் (8) ஆகிய எனது 2 மகன்கள் விழுந்து மாயமாகினர். இது தொடர்பாக முசிறி போலீசில் புகார் அளித்தேன். போலீசார் தேடியும் குழந்தைகள் கிடைக்கவில்லை. கடந்த 2 நாட்களாக தேடுதல் பணி சுணங்கி உள்ளது. அடுத்தக்கட்டமாக பேரிடர் மீட்புக்குழுவை அழைத்து தேடுதல் பணியை துரிதப்படுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ரகுராமன் குழந்தைகளை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அரசு தரப்பில் குழந்தைகளை இழந்த ரகுராமன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றனர்.

Tags : children ,brothers ,Musiri ,peasants ,Darna ,struggle ,
× RELATED மதுராந்தகம் அருகே சிந்தாமணி...