×

பாஜக வேல் யாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டும் விசி கட்சியினர் கோரிக்கை

திருவாரூர், நவ.24: திருவாரூர் மாவட்டத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட செயலாளர் வடிவழகன் மற்றும் பொறுப்பாளர்கள் நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேல் யாத்திரை என்ற பெயரில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு யாத்திரை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி மாநிலம் முழுவதும் வேல் யாத்திரையை பாரதிய ஜனதா கட்சி நடத்தி வருகிறது. அதன்படி வரும் 25ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் யாத்திரை நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல் மருத்துவர்கள் முழுமையாக இல்லாததன் காரணமாக ஏழை, எளியவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த மருத்துவமனைக்கு நிரந்தரமாக நரம்பு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : pilgrimage ,BJP Vail ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் வி.சி கட்சி பொதுக்கூட்டம்