×

திருவாரூர் மாவட்டத்தில் பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள 5ஆயிரம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது

திருவாரூர். நவ.24: திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் காமராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. நாகை எம்.பி. செல்வராஜ், கலெக்டர் சாந்தா, கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுப்பதற்கு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஏற்கனவே அலுவலர்களுடன் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது கனமழை எச்சரிக்கை மற்றும் புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து மாவட்டத்தில் பாதிப்புகளை தடுப்பதற்கு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் இருந்து வரும் 8 தாலுகாக்களில் உதவி கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி கலெக்டர், டிஆர்ஓ தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள குழுவினர் அனைவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களில் பருவமழையின் போது பாதிக்கப்பட்ட இடங்கள், கஜா புயலின் போது பாதிப்பு ஏற்பட்ட இடங்கள் என பல்வேறு இடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் பாதிப்புகளை தடுப்பதற்கும பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு உரிய கட்டிடங்கள் மற்றும் உணவு பொருட்கள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 15 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 430 கன மீட்டர் மணல் மற்றும் ஒரு லட்சம் காலி சாக்குகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இருந்துவரும் நிலையில் கடந்த காலங்களில் உடைப்பு ஏற்பட்ட இடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 4 ஆயிரம் மீட்டர் சவுக்கு மரங்கள் மற்றும் சாலைகளில் விழும் மரங்களை அகற்றுவதற்கு 173 பவர் ஷா,91 ஜேசிபி இயந்திரம் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி 26 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஜெனரேட்டர் போன்றவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மின் பாதிப்புகளை சரி செய்வதற்கு 5 ஆயிரம் மின்கம்பங்கள், 30 மின்மாற்றிகள் போன்றவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, போலீஸ் உட்பட அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvarur district ,
× RELATED கரூர் சுக்காலியூர் அருகே சரிந்து...