×

அனைத்து அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து

புதுக்கோட்டை, நவ.24: நிவர் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி நிருபர்களிடம் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ள உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள், பாதிப்பு வரக்கூடிய இடங்களில் உள்ள பொதுமக்கள் தங்குவதற்கான மாற்று இடங்கள், தீயணைப்புத்துறையில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் அதன் தற்போதைய செயல்பாடு காவலர்களின் எண்ணிக்கை என ஒவ்வொரு துறை வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. இதே போன்று பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது 04322-222207 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

எந்த ஒரு இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டாலும் பொதுமக்கள் 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பதுடன் அவ்வபோது மாவட்ட நிர்வாகம் கூறும் பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்றவும், அறிவுறுத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் இணைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகளின் தலைமையாசிரியரிடம் கூறி பள்ளி கட்டடங்களை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே போன்று பள்ளிகளின் சாவிகளை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். முன்னதாக நிவர் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்பின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் மாதிரி ஒத்திகைப் பயிற்சியினை கலெக்டர் பார்வையிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : government officials ,
× RELATED தமிழகத்தில் 6 மாதங்களில் ஓய்வு பெற...