×

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் குடும்பநல நிரந்தர கருத்தடை சிறப்பு சிகிச்சை முகாம் வரும் 28 முதல் டிச. 4 வரை நடக்கிறது

பெரம்பலூர், நவ. 24: பெரம்பலூரில் நவீன வாசக்டமி விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தினை மாவட்டக் கலெக்டர்  வெங்கட பிரியா துவக்கிவைத்தார். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான நிரந்தர நவீன கருத்தடைக்கான நவீன வாசக்டமி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் வெங்கட பிரியா நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள், மற்றும் குடும்பநல துறை சார்பில் ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீ ன கருத்தடை பிரசாரம் இருவார விழாவாக கடந்த 21ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடக்கிறது. அதில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடும்பநல நிரந்தர கருத்தடை சிறப்பு சிகிச்சை முகாம் வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடக்கிறது.

நவீன வாசக்டமி முறையானது 100 சதவீதம் பாதுகாப்பானது. பக்க விளைவுகள் இல்லை, மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை, கடின உழைப்புக்கு தடையில்லை. நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்று கொள்ளும் நபருக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,100, ஊக்குவிப்போருக்கு ரூ.200 அன்றே வழங்கப்படும் என்றார். இதைதொடர்ந்து விழிப்புணர்வு விளக்க கையேடு மற்றும் கைப்பிரதி ஆகியவற்றை கலெக்டர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராஜ்மோகன், பெரம்பலூர் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் அசோகன், மாவட்ட குடும்ப நல செயலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags : Perambalur Government Hospital ,Family Permanent Contraceptive Special Treatment Camp ,
× RELATED பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ரூ.25...